Friday 11 November, 2011

மனிதம் கொன்று மாக்கள் வளர்ப்போம்!


சமீபத்தில் இப்பூவுலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டியதாக செய்திதாள்களில் படிக்க நேர்ந்தது. 700 கோடியாவது குழந்தை என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தையும், இந்தியத்திருநாட்டின் உத்திரப்பிரதேச குழந்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன என்று தோராயமா கணக்குப்போட்டு சொல்லிட்டாங்க. நான் என் தாய்க்கு இரண்டாவது குழந்தை என்று வைத்துக்கொள்வோம். என் அண்ணன் இறந்துவிட்டால் என் தாய்க்கு நான்தான் தலைசன் குழந்தை ஆகிவிடுவேனா என்ன? உலக மக்கள் தொகை பற்றி வலையில் தேடும்போது, விக்கிபீடியா எனக்கு பல சுவாரஸ்ய தகவல்களை கொடுத்தது. அதில் ஒன்று ஜப்பானின் மக்கள் தொகை குறைந்துகொண்டிருக்கிறது என்பது. நான் விக்கிபீடியாவை நம்பாமல் கூகிள் தேடுபொறியில் ஜப்பானின் மக்கள் தொகை பெருக்க விகிதம் என்ன? என்று தேடினேன். கிடைத்த பதில் கீழ்காணும் படம்தான். ஆம் விக்கிபீடியா சொன்னது உண்மை தான். இதுபோல உலகின் மக்கட்தொகை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.


பூமித்தாயிடம் எனது கேள்வி, எம்குலத்தாய்க்கு தன் கடைசி காலங்களில் பெண்பிள்ளைதான் கஞ்சி ஊற்றும் என தெரிந்திருந்தும், தனக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என ஆசைப்படுவதை போலவே நீயும் இந்த மனிதக்குழந்தைகள்தான் உம்மை உருகுலைப்பது என்று அறிந்திருந்தும் அவர்கள்மீது கொள்ளை ஆசை கொண்டிருப்பதெப்படி?
என் நண்பன் ஒருவன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில் சமீபத்தில் பயணம் செய்ய நேர்ந்தது. நண்பனிடம் உறுதியாக்கப்பட்ட பயணசீட்டு இல்லை, மாறாக வெயிட்டிங் லிஸ்ட் சீட்டு இருந்தது அதைவைத்து பயணசீட்டு பரிசோதகரிடம் பேசி இருக்கையை உறுதிசெய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்லீப்பர் பெட்டியில் ஏறிவிட்டான். பரிசோதகர் அவன் இருந்த பெட்டிக்குள் நுழைந்தவுடன். அவரிடம் சென்று பேசிவிட்டான், பரிசோதனை முடிந்தவுடன் நாம் மீண்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டு தன் பணியை செவ்வனே தொடங்கினார். பிச்சைகாரர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், பயணச்சீட்டை கேட்டிருக்கிறார், இல்லை என்று தெரிந்தவுடன் காலால் எட்டி உதைத்திருகிறார். ஒரு மீட்டர் தொலைவாவது சென்று மற்றொரு இருக்கையில் இடிதுக்கொண்டார் உதை பட்டவர். இதைப் பார்த்தவுடன் நண்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னொரு இனிய சம்பவம் நடப்பதற்கு காத்துகொண்டிருப்பது நண்பனுக்கு தெரிந்திருப்பது நியாயம் இல்லை. சற்று பயத்துடன் நின்றுகொண்டிருகிறான் இருக்கைகள் காலியாக இருந்தும் அமரவில்லை. இன்னொருவர் பரிசோதகரிடம் மாட்டிகொண்டார். இம்முறை பரிசோதகரின் கை பயணியின் கன்னத்தில் இறங்கியது வசவுசொற்க்களுடன் கூடிய அர்ச்சனையும் இலவச இணைப்பாக கிடைத்தது. இதைப்பார்த்த நண்பன் கலவரம் ஆகிவிட்டான்.

பதற்றத்தை மறைத்துக்கொண்டு நின்றபடியே பயணத்தை தொடர்ந்தான். மேற்படி சம்பவங்களில், பரிசோதகர் பல சண்டிப் பயணிகளை பார்த்திருப்பதால் சக மனிதர்களிடையே காட்டும் குறைந்தபட்ச அன்பு, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை இழந்திருக்ககூடும். சம்பவத்தில் பதிக்கப்பட்ட நபர்கள் “இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ், திட்டிக்கிட்டும் அடிச்சிகிட்டும் இருப்பாங்க.. வாங்க பாஸ் நம்ம வேலையை நம்ம கண்டினியு பண்ணுவோம்” (ஒரு சினிமா வசனம்)  என்பதை போல குறைந்தபட்ச மான, ரோசங்களை இழந்து நிற்கின்றனர். இது போன்ற மாற்றங்களுக்கு முழுமுதற் காரணம் மக்கள் தொகை பெருக்கம். ஒருவழியாக பரிசோதகர் தன் பணியை முடித்துவிட்டு இருக்கையில் அமரும்போது நண்பன் மீண்டும் தனது பேச்சுவார்த்தையை துவக்கினான். “ஸ்லீப்பர் கிளாஸ்ல ஒரு டிக்கட் கூட இல்லை” என்றார். முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகச் சொல்லி விலை 900 ரூபாய் என்றார். வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னான். பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கை எண்ணை சொல்லி அதில் படுத்துக்கொள்ள சொன்னார். ரசீது எதுவும் கொடுக்காததால், இவர் இடையில் எதாவது ஸ்டேஷனில் இறங்கி கொண்டு வேறொருவர் வந்தால் என்னசெய்வது என்று நண்பனுக்கு ஒரு பயம். அதனால் பணம் கொடுத்தவரிடம் சென்று நீங்கள் சென்னை வரை வருவீர்களா? வேறொரு டி.டி வந்தால் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டான். நீங்க இன்னும் தூங்கலையா தம்பி, போய் கவலைபடாம தூங்குங்க நான் சென்னை வரைக்கும் வருவேன் என்றார். இப்படியாக அவன் சென்னை வந்து சேர்ந்தான்.

கீழேயுள்ள காணொளிகளை பாருங்கள். ஒன்று நம்ம கோவை மாநகரில் நடந்தது மற்றொன்று சீனாவில் நடந்தது.







மக்கள் தொகை அதிகமாகும்போது சக மனிதர்களின் உயிர் துச்சமென மதிக்கப்படுகிறது. “நாலுபேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் தப்பில்ல” என்ற வசனம் போய் “நமக்கு நல்லதுன்னா நாலுபேரை போட்டுத்தள்னாலும் தப்பில்ல” என்ற வசனம் வந்துவிட்டது. யதார்த்தம் என்ற மாயையில் சுயநலம் பெருமைப்படக்கூடிய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு பல காரணங்கள், மருத்துவ முன்னேற்றம், சராசரி மனித ஆயுட்காலம் உயர்வு என அடுக்கலாம். மூன்று தலைமுறை வாழ்ந்த இடங்களில். இன்று நான்கு தலைமுறை வாழ்கிறது.


சரி பெருக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தலாமா? அப்படிச்செய்தால் தனிமனித உரிமை குழுக்கள் போராட்டம் நடத்துமோ? சமூக விழிப்புணர்வு போன்றவற்றால் தடுக்கமுடியுமா? நீங்கள்தான் பின்னூட்டத்தில் வந்து சொல்லணும்.

இன்றைய தேதியில் கருத்தரிப்பு மையம் நல்ல பிசினஸ். திருமணமான தம்பதிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக குழந்தை இல்லையென்றால் அவ்வளவுதான். தம்பதிகளுக்கே அதை பற்றிய கவலை இல்லையென்றாலும். சுற்றுபுறம் ஆளாளுக்கு ஒரு வைத்தியரை பார்க்கசொல்வார்கள். அதுவும் பெற்றோர்களில் புலம்பல்கள் தாங்கமுடியமலே கருத்தரிப்பு மையத்துக்கு சென்று பணத்தை கொட்டி தம்பதிகள் தங்களுடைய வாரிசுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தை பிறந்தால் தான் ஆண்மை, பெண்மை முழுமைபெற்றதாக அர்த்தம். அப்பொழுதுதான் சமூத்தில் மரியாதையை கிடைக்கும். நாமெல்லாம் போதிதர்மர்களா என்ன, சந்ததிகளுக்கு நம்முடைய டி.என்.ஏ அவ்வளவு முக்கியமா? குழந்தை இல்லையென்றால், ஏன் ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவரை தத்தெடுத்துகொள்ளக்கூடாது? எப்படியாவது பெருக்க விகிதத்தை கட்டுப்படுதியாகவேண்டும் இல்லையேல், மனிதம் அற்ற தனிமனிதர்கள் தங்களுக்குள்ளாகவே யுத்தமிட்டு இறக்க நேரிடும். ஒருவேளை அதை நோக்கித்தான் நாம் பயணம் செய்கிறோமா?

19 comments:

Unknown said...

தம்பீ!நம் நாட்டில் மனிதம் முற்றிலும் இல்லை
அது எப்போதோ இறந்து விட்டது!
சிந்தனையைக் கிளரும் நல்ல பதிவு!

புலவர் சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

காணொளியும் தங்கள் பதிவும்
மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திப் போகிறது
நாம் எங்குதான் போகிறோம்

Yaathoramani.blogspot.com said...

த.ம 2

குடிமகன் said...

புலவர் ஐயா, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. இருக்கிற கொஞ்சநஞ்ச மனிதத்தையாவது காக்கவேண்டும்..

குடிமகன் said...

@ரமணி – தங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பின்தொடர்ந்தமைக்கும், த.ம வாக்கிற்க்கும் நன்றி

SURYAJEEVA said...

என்னய்யா எல்லோரும் ஒரே விரக்தியா பேசிகிட்டு இருக்கீங்க... அங்க புலவர் என்னன்னா? மனிதம் செத்து போய் விட்டது என்கிறார்... நீங்களும் ஆமா அப்படின்னு சொல்றீங்க... அப்படின்னா உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மனிதம் உங்களிடம் இல்லையா? என்னிடம் இருக்கிறது? நான் மனிதன்... எவனோ ஒரு பத்து சதவிகித மனித மிருகங்கள் தவறு செய்தால் மொத்த மனித குலத்தையும் தவறு என்று சொல்வீர்களா?
பாட்னா என்ற ஊர், பீகார் தலைநகரம், எல்லோரும் பீகாரா போற அப்படின்னு கேட்டாங்க...
கத்தியோடு தான் திரிவான்கலாம் என்று சொன்னார்கள்...
அங்க ஒரு சின்ன டீ கடையில் தேநீர் குடித்தோம், சரியான வெயில்... கடையில் உட்கார இடமில்லை... பக்கத்தில் ஒரு நகை கடை, கூட்டமே இல்லை.. அவர் எங்களை அழைத்தார் என்னவோ எதோ என்று சென்றோம்... உள்ளே உட்கார்ந்து டீ சாப்பிடுங்க வெயில் அடிக்குதுன்னார்... இன்னும் என்னால் அவரை மறக்க முடியவில்லை..
தவறு செய்பவர்களை மட்டுமே நினைவில் வைத்திருந்தாள் மனிதம் இருக்காது...
கொஞ்சம் நல்லது செய்பவர்களை நினைத்து பாருங்கள்.. மனிதம் மீது உங்களுக்கு நம்பிக்கை போகாது...

ரொம்ப நல்லா எழுதிக் கொண்டிருந்தீர்கள், ரொம்ப நாள் கழிச்சு வந்தீங்க அப்படின்னு பாத்தா இவ்வளவு விரக்தி ஏன்?

குடிமகன் said...

@சூர்யாஜீவா – நீங்கள் சொல்வது உண்மைதான் நல்லவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் நான் பதிவில் சொல்லமுற்பட்டது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை எனில், மனிதம் தொலைந்துபோகும் என்பதைத்தான்.

SURYAJEEVA said...

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தவில்லை என்றால் மனிதம் தொலைந்து போகும் என்பது ஏன் என்று யோசியுங்கள்?
ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த பொழுது மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் இருந்த பொழுது மனிதம் ஏன் தொலைந்து போனது என்று யோசியுங்கள் விடை கிடைக்கும்?
இங்கு சுரண்டி தின்பவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பது போல் சித்தரிக்கப் படுவதால் தான் மனிதம் தொலைந்து போகிறது...
ஆகையால் வெற்றி பெற சுரண்டி தின்ன வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் சில அறிவு ஜீவிகளால் பரப்பி விடப் படுகிறது...
பிரச்சினையின் ஆணிவேர் மக்கள் தொகை பெருக்கம் அல்ல... மாறாக தனி மனிதனின் சுயநலமே...

குடிமகன் said...

//மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தவில்லை என்றால் மனிதம் தொலைந்து போகும் என்பது ஏன் என்று யோசியுங்கள்?//

எந்த ஒரு பொருளுமே தேவைக்கு அதிகமாக உற்பதியாகும்போது மதிப்பிழந்து குப்பைக்குதானே செல்கிறது?

//ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த பொழுது மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் இருந்த பொழுது மனிதம் ஏன் தொலைந்து போனது என்று யோசியுங்கள் விடை கிடைக்கும்?//

காட்டுமிராண்டிகளாக, நாடோடிகளாக வாழ்ந்தபோது மனிதம் என்பதே இருந்திருக்காது.. தனித்தனியாக வாழ்ந்தால் ஆபத்து என்று சிந்திக்க ஆரம்பித்து, இன்று உனக்கு உதவி செய்தால் நாளை நீ எனக்கு உதவி செய்வாய் என்கிற நம்பிக்கையில் தான் கூட்டு வாழ்க்கை ஆரம்பித்திருக்க வேண்டும்.. குழு, குடும்பம், ஊர், நகரம் என்ற சமூக அமைப்புகள் உருவானபோதுதான் மனிதமும் உருவாகி இருக்கவேண்டும், ஒரு மனிதன் சக மனிதனை நேசிப்பது கூட்டு வாழ்க்கையில் தான் தொடங்கி இருக்கவேண்டும்.

//இங்கு சுரண்டி தின்பவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பது போல் சித்தரிக்கப் படுவதால் தான் மனிதம் தொலைந்து போகிறது...
ஆகையால் வெற்றி பெற சுரண்டி தின்ன வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் சில அறிவு ஜீவிகளால் பரப்பி விடப் படுகிறது...//

மறுக்க முடியாத உண்மை,
ஸ்டீவ் ஜாப்ஸ் – இறந்து ஒருவாரத்தில் டென்னிஸ் ரிச்சி இறந்துபோனார். எத்தனை பேருக்கு தெரியும் டென்னிஸ் ரிச்சி என்பவர் தான் கணினி C மொழியும், Unix – இயங்குதளத்தையும் உருவாக்கி இவ்வுலகுக்கு இலவசமாக கொடுத்தார் என்று, இவர் உருவாக்கிய மொழிக்கும், இயங்குதளதுக்கும் தனக்கென்று ஒரு காப்புரிமையை கூட வாங்கியதில்லை இவர். இவர் உருவாக்கிய மொழியையும், இயங்குதளத்தையும் அடிப்படையாக வைத்து உருவகியவர்கள்தான் பில்கேட்சும், ஸ்டீவ் ஜாப்சும்.

//பிரச்சினையின் ஆணிவேர் மக்கள் தொகை பெருக்கம் அல்ல... மாறாக தனி மனிதனின் சுயநலமே...//

சுயநலம் ஏன் வருகிறது என்று சிந்தியுங்கள், ஒரு வேலைக்கு நான்கு பேர் போட்டியிடும்போது, ஒருவன் தனக்கு தெரிந்ததை மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்கிறான். இதுபோன்ற சூழ்நிலைகள் தான் சுயநலம் உருவாகி, பரவ காரணம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய மனித சமுதாயம்.

vimalanperali said...

மனிதாபிமானத்திற்கும், மக்கள்தொகைப்பெருக்கத்திற்குமாய் ஒரு முடிச்சுப்போட்டு கட்டுரையையும் காணொளியையும் சமர்ப்பித்துள்ளீர்கள்.காணொளியை பார்க்கையில் மசு பிசைகிறது.சற்றே சங்கடமாயும் உள்ளது.

குடிமகன் said...

@விமலன் - வருகைக்கும், கருத்துக்கும் பின்தொடர்ந்தமைக்கும் நன்றி!

SURYAJEEVA said...

சுயநலம் ஏன் வருகிறது என்று சிந்தியுங்கள், ஒரு வேலைக்கு நான்கு பேர் போட்டியிடும்போது, ஒருவன் தனக்கு தெரிந்ததை மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்கிறான்

நீங்கள் சொல்வது படி பார்த்தால், நூற்றுக்கு தொண்ணூறு பேர் சுயநலவாதிகளாய் இருப்பார்கள்... ஆனால் இங்கு நூற்றுக்கு பத்து அல்லது இருபது நபர்கள் தான் சுயநலவாதிகளாய் இருக்கிறார்கள்.... இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்?
விவாதம் அருமையாக இருக்கிறது..

ம.தி.சுதா said...

இரண்டு விடியோக்களும் பார்த்தேன் பதிவை பற்றி ஒரு கருத்திட முடியல... இந்தளவு காட்டுமிராண்டிகள் இந்த உலகத்தில் கடவுளால் ஏன் படைக்கப்பட்டுள்ளார்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

குடிமகன் said...

@ம.தி.சுதா – தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

சுதா SJ said...

அவர்களை நினைக்கும் போதே கோபமும் ஆதங்கமும்தான் வருகிறது.....

காணொளி கண் கொண்டு பார்க்க முடியவில்லை .... மிக சங்கடமாய் இருக்குப்பா....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். படித்து விட்டு, கண்ணொளியை பார்த்து விட்டு, என் மனம் மிகவும் பாதித்தது. மனிதர்களைப் பற்றித் தான் நான் வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். தங்களின் பகிர்வுக்கு நன்றி. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

குடிமகன் said...

@துஷ்யந்தன்- கருத்துக்கு நன்றி பாஸ்

@திண்டுக்கல் தனபாலன் – தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் ஆய்வுகள் அருமை சார்

Zakir said...

Enna Kudimagan, eppadi kalakureenka..... Enaku evalu naal theryathu neenka evelavu nall tamil la ezhuthuveenkannu.
en kaniniyil tamil ezhuthukal illai. athanal tamilil ezhutha mudiyavillai.

thodarnthu kalakunka

குடிமகன் said...

// Zakir said...
Enna Kudimagan, eppadi kalakureenka..... Enaku evalu naal theryathu neenka evelavu nall tamil la ezhuthuveenkannu.
en kaniniyil tamil ezhuthukal illai. athanal tamilil ezhutha mudiyavillai.

thodarnthu kalakunka //
ஜாகிர் வணக்கம்.. எப்படி இருக்கிங்க?

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!