Friday 11 November, 2011

மனிதம் கொன்று மாக்கள் வளர்ப்போம்!


சமீபத்தில் இப்பூவுலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டியதாக செய்திதாள்களில் படிக்க நேர்ந்தது. 700 கோடியாவது குழந்தை என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தையும், இந்தியத்திருநாட்டின் உத்திரப்பிரதேச குழந்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன என்று தோராயமா கணக்குப்போட்டு சொல்லிட்டாங்க. நான் என் தாய்க்கு இரண்டாவது குழந்தை என்று வைத்துக்கொள்வோம். என் அண்ணன் இறந்துவிட்டால் என் தாய்க்கு நான்தான் தலைசன் குழந்தை ஆகிவிடுவேனா என்ன? உலக மக்கள் தொகை பற்றி வலையில் தேடும்போது, விக்கிபீடியா எனக்கு பல சுவாரஸ்ய தகவல்களை கொடுத்தது. அதில் ஒன்று ஜப்பானின் மக்கள் தொகை குறைந்துகொண்டிருக்கிறது என்பது. நான் விக்கிபீடியாவை நம்பாமல் கூகிள் தேடுபொறியில் ஜப்பானின் மக்கள் தொகை பெருக்க விகிதம் என்ன? என்று தேடினேன். கிடைத்த பதில் கீழ்காணும் படம்தான். ஆம் விக்கிபீடியா சொன்னது உண்மை தான். இதுபோல உலகின் மக்கட்தொகை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.


பூமித்தாயிடம் எனது கேள்வி, எம்குலத்தாய்க்கு தன் கடைசி காலங்களில் பெண்பிள்ளைதான் கஞ்சி ஊற்றும் என தெரிந்திருந்தும், தனக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என ஆசைப்படுவதை போலவே நீயும் இந்த மனிதக்குழந்தைகள்தான் உம்மை உருகுலைப்பது என்று அறிந்திருந்தும் அவர்கள்மீது கொள்ளை ஆசை கொண்டிருப்பதெப்படி?
என் நண்பன் ஒருவன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில் சமீபத்தில் பயணம் செய்ய நேர்ந்தது. நண்பனிடம் உறுதியாக்கப்பட்ட பயணசீட்டு இல்லை, மாறாக வெயிட்டிங் லிஸ்ட் சீட்டு இருந்தது அதைவைத்து பயணசீட்டு பரிசோதகரிடம் பேசி இருக்கையை உறுதிசெய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்லீப்பர் பெட்டியில் ஏறிவிட்டான். பரிசோதகர் அவன் இருந்த பெட்டிக்குள் நுழைந்தவுடன். அவரிடம் சென்று பேசிவிட்டான், பரிசோதனை முடிந்தவுடன் நாம் மீண்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டு தன் பணியை செவ்வனே தொடங்கினார். பிச்சைகாரர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், பயணச்சீட்டை கேட்டிருக்கிறார், இல்லை என்று தெரிந்தவுடன் காலால் எட்டி உதைத்திருகிறார். ஒரு மீட்டர் தொலைவாவது சென்று மற்றொரு இருக்கையில் இடிதுக்கொண்டார் உதை பட்டவர். இதைப் பார்த்தவுடன் நண்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னொரு இனிய சம்பவம் நடப்பதற்கு காத்துகொண்டிருப்பது நண்பனுக்கு தெரிந்திருப்பது நியாயம் இல்லை. சற்று பயத்துடன் நின்றுகொண்டிருகிறான் இருக்கைகள் காலியாக இருந்தும் அமரவில்லை. இன்னொருவர் பரிசோதகரிடம் மாட்டிகொண்டார். இம்முறை பரிசோதகரின் கை பயணியின் கன்னத்தில் இறங்கியது வசவுசொற்க்களுடன் கூடிய அர்ச்சனையும் இலவச இணைப்பாக கிடைத்தது. இதைப்பார்த்த நண்பன் கலவரம் ஆகிவிட்டான்.

பதற்றத்தை மறைத்துக்கொண்டு நின்றபடியே பயணத்தை தொடர்ந்தான். மேற்படி சம்பவங்களில், பரிசோதகர் பல சண்டிப் பயணிகளை பார்த்திருப்பதால் சக மனிதர்களிடையே காட்டும் குறைந்தபட்ச அன்பு, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை இழந்திருக்ககூடும். சம்பவத்தில் பதிக்கப்பட்ட நபர்கள் “இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ், திட்டிக்கிட்டும் அடிச்சிகிட்டும் இருப்பாங்க.. வாங்க பாஸ் நம்ம வேலையை நம்ம கண்டினியு பண்ணுவோம்” (ஒரு சினிமா வசனம்)  என்பதை போல குறைந்தபட்ச மான, ரோசங்களை இழந்து நிற்கின்றனர். இது போன்ற மாற்றங்களுக்கு முழுமுதற் காரணம் மக்கள் தொகை பெருக்கம். ஒருவழியாக பரிசோதகர் தன் பணியை முடித்துவிட்டு இருக்கையில் அமரும்போது நண்பன் மீண்டும் தனது பேச்சுவார்த்தையை துவக்கினான். “ஸ்லீப்பர் கிளாஸ்ல ஒரு டிக்கட் கூட இல்லை” என்றார். முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகச் சொல்லி விலை 900 ரூபாய் என்றார். வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னான். பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கை எண்ணை சொல்லி அதில் படுத்துக்கொள்ள சொன்னார். ரசீது எதுவும் கொடுக்காததால், இவர் இடையில் எதாவது ஸ்டேஷனில் இறங்கி கொண்டு வேறொருவர் வந்தால் என்னசெய்வது என்று நண்பனுக்கு ஒரு பயம். அதனால் பணம் கொடுத்தவரிடம் சென்று நீங்கள் சென்னை வரை வருவீர்களா? வேறொரு டி.டி வந்தால் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டான். நீங்க இன்னும் தூங்கலையா தம்பி, போய் கவலைபடாம தூங்குங்க நான் சென்னை வரைக்கும் வருவேன் என்றார். இப்படியாக அவன் சென்னை வந்து சேர்ந்தான்.

கீழேயுள்ள காணொளிகளை பாருங்கள். ஒன்று நம்ம கோவை மாநகரில் நடந்தது மற்றொன்று சீனாவில் நடந்தது.







மக்கள் தொகை அதிகமாகும்போது சக மனிதர்களின் உயிர் துச்சமென மதிக்கப்படுகிறது. “நாலுபேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் தப்பில்ல” என்ற வசனம் போய் “நமக்கு நல்லதுன்னா நாலுபேரை போட்டுத்தள்னாலும் தப்பில்ல” என்ற வசனம் வந்துவிட்டது. யதார்த்தம் என்ற மாயையில் சுயநலம் பெருமைப்படக்கூடிய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு பல காரணங்கள், மருத்துவ முன்னேற்றம், சராசரி மனித ஆயுட்காலம் உயர்வு என அடுக்கலாம். மூன்று தலைமுறை வாழ்ந்த இடங்களில். இன்று நான்கு தலைமுறை வாழ்கிறது.


சரி பெருக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தலாமா? அப்படிச்செய்தால் தனிமனித உரிமை குழுக்கள் போராட்டம் நடத்துமோ? சமூக விழிப்புணர்வு போன்றவற்றால் தடுக்கமுடியுமா? நீங்கள்தான் பின்னூட்டத்தில் வந்து சொல்லணும்.

இன்றைய தேதியில் கருத்தரிப்பு மையம் நல்ல பிசினஸ். திருமணமான தம்பதிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக குழந்தை இல்லையென்றால் அவ்வளவுதான். தம்பதிகளுக்கே அதை பற்றிய கவலை இல்லையென்றாலும். சுற்றுபுறம் ஆளாளுக்கு ஒரு வைத்தியரை பார்க்கசொல்வார்கள். அதுவும் பெற்றோர்களில் புலம்பல்கள் தாங்கமுடியமலே கருத்தரிப்பு மையத்துக்கு சென்று பணத்தை கொட்டி தம்பதிகள் தங்களுடைய வாரிசுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தை பிறந்தால் தான் ஆண்மை, பெண்மை முழுமைபெற்றதாக அர்த்தம். அப்பொழுதுதான் சமூத்தில் மரியாதையை கிடைக்கும். நாமெல்லாம் போதிதர்மர்களா என்ன, சந்ததிகளுக்கு நம்முடைய டி.என்.ஏ அவ்வளவு முக்கியமா? குழந்தை இல்லையென்றால், ஏன் ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவரை தத்தெடுத்துகொள்ளக்கூடாது? எப்படியாவது பெருக்க விகிதத்தை கட்டுப்படுதியாகவேண்டும் இல்லையேல், மனிதம் அற்ற தனிமனிதர்கள் தங்களுக்குள்ளாகவே யுத்தமிட்டு இறக்க நேரிடும். ஒருவேளை அதை நோக்கித்தான் நாம் பயணம் செய்கிறோமா?