Thursday, 18 August, 2011

நாவற்பழ வேட்டை!


சென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அன்று ஆகஸ்ட் 15,  காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா? இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.

“சுதந்திர தின வாழ்த்துக்கள்!! கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”

என்ற குறுஞ்செய்தியை (??) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10.  எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம்.  தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30  நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10  ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.


களா பழம்

இலந்தை பழம்


சைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10  ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.
குரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

தம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.
<அடர்ந்த காட்டின் காலைப்பொழுதில்,

மான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.

சிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>

ஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.

மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.

தம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித  ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.


காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!

Wednesday, 3 August, 2011

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அரங்கேறும் ஓர் அற்புதம்!
இவ்வாண்டு நடைபெறும் பொறியியல் கலந்தாய்விற்கு இருமுறை செல்ல வாய்ப்பு கிட்டியது, முதல் முறை என் ஊர் மாணவர் ஒருவருக்காகவும். மறுமுறை சொந்தகார மாணவிக்கு. அண்ணா பல்கலைக்கழக வளாகம் - தம்மிடத்தில் குழுமி இருக்கும் வருங்கால பொறியாளர்களை கண்டு பெருமிதமடைகிறது. அங்கிருந்தவர்களை பார்த்தமட்டில் என்னால் இருவகையாக பிரிக்க முடிந்தது.

முதல் வகை – நன்கு படித்த தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும் நகரத்தில் வசிப்பவர்கள். ஒருவரின் கலந்தாய்விற்காக ஒரு முழு குடும்பமே வந்துள்ளது. இந்த மாணவர் அல்லது மாணவியர் கண்களில் எதிர்கால கனவுகள் சிறகடிக்கின்றன. இவர்கள் தங்களின் தேவையை தெளிவாக பலமுறை அலசி ஆராய்ந்து தங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தெரிவு ஒன்று, இரண்டு, மூன்று... என்று வரிசைப்படுத்தி, தங்களுக்கான முறை எப்பொழுது வருமென்று காத்திருப்பவர்கள்.

இரண்டாம் வகை – படிக்காத தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும்  கிராமத்தில் வசிப்பவர்கள். இவர்கள் தந்தை மற்றும் தனது ஊரில் படித்த ஒருவருடன் வந்துள்ளனர். இவர்களுக்கு எங்கு செல்வது என்ன செய்வது என்று புரியாமல், ஒருவித தயக்கத்துடன் காணப்பட்டனர். மாணவன் அல்லது மாணவியின் கண்களில் ஒருவித மிரட்சியை காணமுடிந்தது. இந்தவகையில் முதல்முறையாக சென்னைக்கு வருபவர்கள்தான் அதிகம். சென்னையின் பிரமாண்டம் இந்த மிரட்சியினை ஏற்படுத்தி இருக்கலாம். மேலும் இவர்கள் இங்குள்ளவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்பதாலும் தயக்கம் இவர்களுடன் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தபின், மாணவ மாணவியருடன் வந்தவர்கள் வெளியே அனுப்ப படுவார்கள். பிறகு மாணவ மாணவியர்கள் மேல் தளத்திற்கு சென்று தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டு அரங்கிலிருந்து வெளியேறவேண்டும். இதுதான் நடைமுறை. மகளுடன் வந்த தந்தை ஒருவர் தனது மகளை தனியே அனுப்ப மறுத்து, பணியிலிருந்த கவலருடன் சண்டைபோடுகிறார். காவலரோ அவரை வெளியே அழைத்து வந்து, நடைமுறையை விளக்குகிறார். இருப்பினும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். அரங்கின் வாயிற்படியில் 15 நிமிடங்கள் காத்திருந்து தனது மகளுடன் வெளியே வருகிறார்.


சரி, இந்த இருதரபினர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புற மாணவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு இருந்தது, ஏதேதோ காரணங்களுக்காக 2001 –ஆம் வருடம் இந்த ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டது. இப்பொழுது இதனை தமிழக அரசு வேறு வடிவில் செயல்படுத்துகிறது. முதல் பட்டதாரி மாணவ -மாணவிகளுக்கு உயர் கல்வி கட்டணத்தில் குறிப்பட்ட தொகையை குறிப்பிட்ட படிப்புகளுக்கு அரசே ஏற்கும். இத்திட்டதைதான், பதிவின் தலைப்பில் வர்ணித்துளேன்.


மேலே பார்த்த அட்டவணை பொறியியல் கல்விக்கான கட்டணச் சலுகை ஆகும். இதேபோல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தில் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகை சாதி, வருமானம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதுதான் முக்கியமாக குறிபிடத்தக்கது.

பள்ளி கல்வியில் பல குழப்பங்களுக்கிடைய சிக்கித்தவிக்கும் தமிழக அரசை இந்த திட்டத்திற்காக பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. சீக்கிரமே சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் போன்ற பிரச்சனைகளில் நல்ல முடிவை
எடுக்க வாழ்த்துகிறேன்.

தொட்டதுக்கெல்லாம் துள்ளி குதிக்கும் அரசியல்வாதிகள் எங்கே? இந்த திட்டத்தை பாராட்டி ஒரு அறிக்கை விடலாமே. குறை சொல்வது மட்டும்தான் இவர்களுக்கு தெரியுமா?

பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், வருமான சான்றை போல் அல்லாமல், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கடைசி வரை உண்மையானதாகவே இருக்கட்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மற்றொன்றையும் கவனிக்க தவறவில்லை, தனியார் பொறியியல் கல்லூரிகள், விரிவுரையாளர்களை ஏவி தங்கள் கல்லூரியில் சேர ஆட்கள் பிடிக்கிறது. கலந்தாய்வு முடியபோகும் தருவாயில், இன்னும் 16 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரப்படாமல் இருப்பதுதான் வேடிக்கை.

கல்லூரிகளின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் கல்லூரி முதலாளிகள்தான். எ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைகிறது என்பதற்காகவே பல கல்லூரிகளை ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு கல்லூரியை எப்பாடுபட்டாவது நல்ல கல்லுரி என்ற பெயரை பெறவைத்துவிட்டு, அதே பெயரில் (மிகச்சிறிய வித்தியாசத்தில்) பல கல்லூரிகளை உருவாகிவிட்டால், லாபம் பன்மடங்காகும் என்ற பேராசைதான். இதனால் மாணவர்களும் எது போலி எது உண்மை என்பதை கண்டறிய சிரமப்பட வேண்டியிருக்கிறது.

பத்து ஆண்டுகளில் முன்பிருந்ததைவிட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது, மாணவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயரவில்லை.

ஆகவே கல்லூரி முதலாளிகளே, தங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தால், ஒன்றை அறிவியல் / கலை கல்லூரியாக மாற்றிவிடுங்கள். இப்பொழுது அதற்குத்தான் நல்ல மவுசு. மேலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் யோசனை கூறுவதற்கு கூட காசு கேட்பார்கள், ஆனால் நான் அப்படி இல்லை. எனது யோசனையை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.