Monday 20 June, 2011

காலாவதியான கல்விமுறை – ஒரு விமர்சனம்

நான் சமீபத்தில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்தேன். அது ஒரு வெள்ளிக்கிழமையின் இரவு நேரம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் எத்தனை மனிதர்கள்.அவர்கள் அனைவருக்கும் அப்பொழுதைய குறிக்கோள், எப்படியாவது தாம் செல்ல வேண்டிய பேருந்தில் இருக்கையை பிடித்து விட வேண்டும் என்பதுதான். 10 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு எனக்கான பேருந்து வந்து நிற்பதற்கு முன், பாதி இருக்கைகள் நிறைந்து விட்டது. நானும் அடித்து பிடித்து ஒரு இருக்கையை பிடித்து விட்டேன். மனதில் ஒரு நிம்மதி.

பக்கத்துக்கு இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர். “பஸ்ல எடம் புடிக்க ஒரு பெரிய போராட்டத்தயே நடத்தனும் போல” என்றார் அவர்.
எனக்கு ஏனோ எனது மும்பை அனுபவத்தை அவரிடம் சொல்ல தோன்றியது. “பாம்பே-ல எல்லா பஸ் ஸ்டாப்லையும் வரிசையில நின்னுதான் பஸ்-ல ஏறுவாங்க, நம்ம ஊர்லையும் இதேபோல செஞ்சா நல்லா இருக்கும்” என்றேன்.
“நம்ம ஊர்ல அது மாதிரி செஞ்சா, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல ஒரு போலிஸ் ஸ்டேஷனையும் வைக்கணும், ஏன்னா நம்மாளுங்க நாந்தான் முன்ன வந்தனு, பிரச்சினை பண்ணுவாங்க, எல்லாத்துக்கும் மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம்” என்றார். அவரது பேச்சில் இருந்த சலிப்பை என்னால் உணரமுடிந்தது.

என்னைப்பற்றிய விசாரிப்பு மற்றும் அவரை பற்றிய அறிமுகம் முடிந்தது.
“தம்பி என்னோட பெரிய பையன் எஞ்சிநீரிங் படிக்கிறான், இவனமாதிரியே சின்னவனையும் படிக்கவச்சிட்டா நல்லா இருக்கும், ஆனா அவன் இப்பதான் பத்தாவது முடிச்சான் ஆனால் மார்க் ரொம்ப கம்மியா எடுத்திருக்கான்” என்றார்.

“ஏன் நீங்க சின்னவனையும் எஞ்சிநீரிங் படிக்கவைகனும்னு சொல்றிங்க?” என்று வினவினேன்.
“நாளைக்கி, உன்னை எஞ்சிநீரிங் படிக்க வச்சிட்டாங்க, என்னை ஒண்ணுக்கும் ஆகாதத படிக்க வச்சிட்டாங்கனு ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்துடக்கூடாது பாருங்க” என்றார்.

நல்ல பொறுப்பான அப்பா என்று நினைத்து விட்டு, அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினேன்.
என் குடும்பத்தின் அனுபவமும் கிட்டத்தட்ட இதேதான், என் சகோதரன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான் ஆனால் மதிப்பெண்கள் ஒப்பிட்டு அடிப்படையில் மிகக்குறைவு. மேற்குறிப்பிட்ட நபருக்கு ஆலோசனை வழங்கும் போது இருந்த தெளிவு எனது சகோதரனுடைய மேற்படிப்பை திட்டமிடும்போது இல்லவேயில்லை. ஏனென்றால் இன்னும் கொஞ்சம் மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ‘உபதேசம் ஊருக்கு மட்டும் தான்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பிரச்சினை என்னுடையதா இருந்தால் அதனை உணர்ச்சிப்பூர்வமாகவும், மற்றவருடையதாக இருந்தால் அதனை அனுபவப்பூர்வமாக அணுகுவதுதான் என்னால் முடிகிறது. பிரச்சினை எவ்வளவு வீரியமனதாக இருந்தாலும் அதனை நிதானமாக அணுகும் பயிற்சியை எனது கல்வியோ அல்லது சுற்றுப்புறமோ எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.

பொறியியல் தான் என் சகோதரனுக்கு மேற்படிப்பு திட்டம் என்பது குடும்பத்தினர் அனைவரின் ஒருமித்த முடிவு, நான் டிப்ளமோ படிக்க வைத்து பின் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடலாம் என்றேன். டிப்ளமோ செய்முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அடிப்படை புரிதலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை முன்வைத்தேன். என் தந்தையோ +1 சேர்க்கலாம் என்று சொல்லி, என்னை சமாதான படுத்திவிட்டு அதை செய்தும் விட்டார். என் தாயும் கிட்டத்தட்ட தந்தையை ஆதரித்தார், 7 ½ சனி இன்னும் மூன்று மாதத்தில் முடிவடைகிறது பிறகு நன்றாக படிப்பான் என்றார். எனக்கு ஏனோ ஒரு திரைப்பட வசனம்(“ஆடி போயி ஆவணி வந்தா என் பையன் டாப்பா வருவான்”) தான் நினைவுக்கு வந்து சென்றது. என்னடா படிக்கபோறது ஒருத்தன், முடிவு பண்றது நீங்களா என்று கோவப்படாதிங்க, என் சகோதரர் மிகவும் விவரமானவர் எந்த முடிவையும் தானாக எடுக்கமாட்டார், நாம ஏதாவது கேட்டா ‘நீங்க என்ன சொல்றிங்களோ அதையே படிக்கிறேன்’ என்பார். இதில் ஒரு உள்குத்து இருக்கிறது. தான் இதை படிக்கிறேன் என்று குறிப்பிட்டு சொல்லிட்டா, ஒருவேளை அதிலும் சொதப்பிவிட்டால், ‘நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை போட்டு தாளித்து விடுவீர்கள் அல்லவா?’ என்ற ஒரு எச்சரிக்கை உணர்வுதான்.
சரி குடும்பக் கதைய இப்படியே விட்டுவிட்டு இக்கால கல்விமுறையை ஓர் அலசல் செய்து பார்ப்போம்.

சமச்சீர்கல்வி – அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம், சமத்துவம் என்ற உன்னதமான தத்துவத்திலிருந்து பிறந்திருக்கிறது. ஆனால் சமத்துவம் வெறும் பாடத்திட்டத்தில் போதுமா? என்ற கேள்வி எழுகிறது. புதிய அரசு இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முகாந்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும் புலப்படுகிறது, ஒருவேளை இந்த பாடத்திட்டம் நல்ல பலனை கொடுக்குமாயின், கலைஞர் உருவாக்கிய பாடத்திட்டம் என்பதுபோல் வரலாறு ஆகிவிடும் என்பதுதான் காரணமாக இருக்கமுடியும். நான் இப்படி கூறுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

1.       ஓரிரு ஆண்டுகள் நிபுணர்களின் குழு ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, அமல்படுத்த தேவையான குறைந்தப்பட்ச தரம் கூட இல்லை என்பதை ஓரிரு நாட்களில் உறுதிப்படுத்துவது சாத்தியம்தானா?

2.       நீதிமன்றங்கள் கூறுவதை ஒரு பொருட்டாக கருதாமல், மேல்முறையீடு செய்து, இறுதித்தீர்வு எட்டும் வரை மாணவர்களை காக்க வைப்பது நியாயம் தானா?

3.       அரசு கூறுவதைப்போல தரம்தான் காரணம் என்றால், தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுக்கலாம் அல்லவா?

4.       2௦௦ கோடி பொருட்செலவில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு, பழய பாடத்திட்டப்படி புதிய புத்தகங்களை அச்சிடுவதேன்? - என்ன ஒரு வில்லத்தனம்?
சரி அரசியலை விடுங்கள், தனியார் பள்ளிகள் தரம் என்ற வார்த்தையை தங்களுக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம். தனியார் பள்ளிகள் சமச்சீர்கல்வி பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று அதனை எதிர்க்கின்றன. உண்மையாகவே தரத்தில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமச்சீர்கல்வியை கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, அப்பொழுதே நீதிமன்றத்தை அணுகி சமச்சீர் பாடத்திட்ட வரைவு மற்றும் தயாரிப்பு குழுக்களில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி, குழுக்களில் இடம் பிடித்து தரத்தை உயர்த்தி இருக்கலாமே? இதற்கெல்லாம் நீங்கள் நீதிமன்றம் போகமாடீர்கள் ஆனால் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் போதாதென்று நீதிமன்றம் போவீர்கள். தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டிலிருந்தே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கிவிட்டன. மேலும் பெற்றோர்களை அணுகி தங்கள் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ-ல் சேர்க்கும்படி வலியுறுத்துகின்றன.

தனியார் பள்ளிகள் எதனை தரம் என்று கூறுகின்றன?

1.       9-ஆம் மற்றும்   11 –ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களை இரண்டு ஆண்டுகள் நடத்துவதை தரம் என்கிறார்களா?

2.       மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, குறுக்கு வழிகளில் மனப்பாடம் செய்வதெப்படி என்று பயிற்சி கொடுப்பதை தரம் என்கிறார்களா?

3.       உங்களுடைய அழுத்தம் காரணமாக, ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களில், ஒருவன் மற்றவனிடம் சந்தேகம் கேட்கும்போது, பதில் கூறினால் நம்மைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவானோ என்ற எண்ணத்தில் தெரியாது என்று கூறிவிடுகிறான். இதைத்தான் தரம் என்கிறார்களா?
மக்கள்தொகை பெருக்கம் மற்றும் கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு போன்ற காரணங்களால், கல்வித்துறையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக என்றெண்ணி இத்துறைக்கு வந்த வியாபாரிகள் தயவுசெய்து வேறுதொழிலை தேர்ந்தெடுங்கள். மாணவர்களின் கற்றலில், முன்னேற்றத்தில் ஆனந்தம் அடைபவர்களுக்கே இத்துறை சரியாக இருக்கும்.

தொலைக்காட்சி கேபிள் சேவை அரசுடமையக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, ஏன் பள்ளி கல்வித்துறையை அரசுடமையாக்க முயற்சி மெற்கொள்ள கூடாது?
நமது பாடபுத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று பார்க்கலாம்.

தமிழ் -  திராவிடக் கொள்கைகளை வளர்க்க ஒரு ஊடகமாக பயன்படுத்தபடுகிறது. படித்தவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் நாத்திகர்கள். என்பதுமதிரியான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். தந்தைப்பெரியாரைப் பற்றி கூறு என்று ஒரு மாணவனிடம் கேட்கும்போது, பிள்ளையார் சிலையை எட்டி உதைத்தவர் என்பது போன்ற பதில்கள் தான் வருகின்றன. தந்தைப்பெரியார் அவர்கள் செய்த சமூகச்சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் தயாரிப்பதா? அல்லது அனைத்திற்கும் திராவிடச் சாயம் பூசி தயாரிப்பதா? ஏன் கம்யூனிஸ கொள்கைகள் உன்னதம் இல்லையா? கொள்கைகளை தவிர்த்து  தமிழை வளர்க்க முயற்சிக்கபடவேண்டும். மேலும் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கிராமியக் கலைகள் மற்றும் பண்பாட்டிற்கு கொடுக்கப்படவில்லை. இயல், இசை மற்றும் நாடகம் ஆகியவற்றை அதன் இயல்பான வழிகளில் கற்பித்தல் மற்றும் கற்றல் நடைபெற வேண்டும். முக்கியமாக தமிழ் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் விதமாக பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். சித்த மருத்துவம் பற்றிய பாடங்களையும் அதிகப்படுத்துதல் வேண்டும்.
ஆங்கிலம் – பாடதிட்டத்தில் குறைகூறும் அளவிற்கு நான் பள்ளிக்காலங்களில் ஆங்கிலத்தை படித்திருக்கவில்லை. பனிரெண்டாம் வகுப்பு முடித்தபிறக்கும், ஆங்கிலத்தில் நான்கு வாக்கியங்கள் சொந்தமாக எழுத தெரியாது. இது வந்தால் இதைபோடனும் என்ற அளவில்தான் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. எழுதுதல், படித்தல், கருத்துக்களை தயக்கமின்றி கூறல் போன்ற திறன்களை வளர்க்க ஏதுவாக பயிற்றுவிக்கும் முறைகளை மாற்ற வேண்டும். இதில் தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாக நான் கருதுகிறேன்.

கணிதம் – பாடதிட்டத்தில் நிறையவே கற்பிக்கப்படுகின்றன, ஆனால் அவற்றின் நடைமுறை பயன்பாடுகள் குறித்து கற்பிக்கப்படுவதில்லை. ஒரு கணித (வடிவியல்) முறையின் பயன்பாடுகளை அறியாமல், கணக்கை தீர்க்கும் முறையை மட்டும் அறிந்திருப்பது அந்த கணித முறைப்பற்றி எதுவுமே அறியாமல் இருப்பதற்கு சமம். ஒரு கணக்கை பல கணித முறையில் தீர்க்க முடியும் என்பதால், மாணவர்கள் அவற்றை ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு பாடங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
அறிவியல் – பாடதிட்டத்தில் அறிவியல் தத்துவங்கள் நிறையவே கூறப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை விதிகளையும் எளிய செயல்முறை விளக்கங்களுடன் நிரூபிப்பது மற்றும் அவற்றின் நடைமுறை பயன்பாடுகளை விவரிப்பது என்ற வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

சமூக அறிவியல் – மிகவும் பிற்படுத்தப்பட்ட பாடம் எனச்சொல்வது மிகையாகாது. அந்த அளவிற்கு இதன் முக்கியத்துவம் மங்கிவிட்டது. இதன் உட்பிரிவுகளின் விமர்சனத்தை கீழே காண்போம்.
வரலாறு – ஆண்டுகள், நிகழ்வுகள் மற்றும் பெயர்களை கொண்ட ஒரு தகவல் புத்தகமாகவே வடிவமைகபட்டுள்ளது. அரசர்களின் ஆட்சிமுறை, ஆளுமைத்திறன் உட்பட அனைத்து தனித்திறமைகளும் விவரிக்கப்பட்டு விவாதிக்கப்படுதல் வேண்டும். நிகழ்வுகளில் உள்ள நன்மை- தீமைகளை விவரிக்கப்பட்ட பாடங்களை உருவாக்க வேண்டும்.

புவியியல் – இடங்களின் பெயர்களை வரைபடங்களில் குறிப்பதோடு நில்லாமல். அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, தொழில் மற்றும் ஆட்சிமுறை போன்றவற்றையும் விவரிக்கப்பட வேண்டும். இதன்மூலமாக மாணவர்களுக்கு இந்திய மற்றும் உலக அளவிலான மக்களை பற்றிய அறிவு கிடைக்கும்.
குடிமையியல் – வெறும் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் பற்றிய குறிப்பேடாக அல்லாமல் அவற்றின் உன்னத நோக்கங்களையும், இந்திய குடிமக்களின் உரிமை மற்றும் கடமைகளையும் விவரிக்கும் படமாக இருக்க வேண்டும்.

மேலே குறிப்பட்ட அனைத்து பாடங்களும் எளிமையான முறையில் அனைத்து தரப்பு மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். நிறைய பாடங்களை திணிக்காமல் குறைந்த பாடங்களை தெளிவாக தரும் நோக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
வகுப்பறை தொழிநுட்ப உதவியுடன் மேம்படுத்தபடவேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். தேர்வு மற்றும் மதிப்பீடு முறைகளில் நிச்சயம் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்.

மாணவர்களின் தனித்திறன்களை கண்டறியவும், அவற்றை மேம்படுத்தவும். மாணவர்களுக்கு நற்பண்புகளை புகட்டவும் ‘வாழ்க்கை கல்வி’ என்ற பெயரில் புதிய முழுநேர பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டும். இதனை முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்ற படங்களுக்கு இணையாக சரிவிகிதத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும். இதில் கிழ்வருவனவற்றை இணைக்க வேண்டும்.

1.       கலை - நடனம், இசை, ஓவியம் போன்ற கலைகளை பயிற்சியுடன் கூடிய பாடமாக வடிவமைக்கபட வேண்டும்.

2.       விளையாட்டு – பயிற்சியுடன் கூடிய விளையாட்டு பாடம் வடிவமைக்கபட வேண்டும்.

3.       மனவளம் – யோகா போன்ற பயிற்சிகளையும், வேதாத்திரி மகரிஷி போன்றவர்கள் உருவாகிய உடற்பயிற்சிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

4.       நீதிபோதனை–போதனைகள் மூலம் கசாப் போன்ற எதிர்மறையானவர்களை உருவக்கபடுவது சாத்தியமாகும் போது. நாம் சிறந்த, நேர்மறையான வருங்கால குடிமக்களை உருவாக்க நீதிபோதனை போன்றவற்றை பயன்படுத்தலாமே?

5.       பிற மனிதர்களுடன் பழகுதல், குறிப்பாக ஆண்- பெண் வேறுபாடின்றி பழகுதல், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் திறன் போன்றவற்றை மேம்படுத்த பயிற்சிகள்.
இயற்கையால் படைக்கப்பட்ட மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட அனைத்திற்கும் காலாவதி என்ற ஒன்று உள்ளது. என்றோ படைக்கப்பட்ட கல்விமுறையை மட்டும் மாற்றமேதும் செய்யாமல் அப்படியே பயன்படுதி வருவது எந்தவிதத்தில் சரி? கல்விமுறை மட்டுமல்ல, அனைத்து சட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கும் பொழுதே அதற்கான காலாவதி நாள் குறிக்கப்பட வேண்டும். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கேற்ற சட்ட திட்டங்களை உருவாக்கிகொள்ள வாய்ப்பை வழங்கலாம். மேலும் இதன்மூலமாக ஒரு சட்டம் அல்லது ஒரு அமைப்பின் வீரியம் குறைக்கபடுவதை தடுக்கலாம்.

ஊழல் மற்றும் கருப்புபணம் போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் முன்னுரிமை பள்ளிக்கல்வி சீர்திருத்தத்திற்கு கொடுக்கபடாமல் இருப்பது வருத்தமளிகிறது. கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவந்துவிட்டால், மற்ற அனைத்து துறைகளிலும் மாற்றம் தானாக நிகழும், ஆனால் அதற்க்கு கொஞ்சகாலம் பிடிக்கும் அவ்வளவுதான்.

3 இடியட்ஸ் படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள், போராட தயாராகுங்கள்.