Thursday 28 April, 2011

தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - ஒரு கதைச்சுருக்கம்


தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - மக்களாட்சி திருவிழாவிற்கு  தேதி குறித்த நாளிலிருந்து நான் அரசியல்  மற்றும் தேர்தல் செய்திகளை ஆர்வமாக படிக்க  ஆரம்பித்து விட்டேன். ஒரு சில நாட்களில் அந்த ஆர்வம் மிகையான ஆர்வமாக மாற்றம் கண்டுவிட்டது. எனது நண்பர்களிடமும் தமிழக அரசியலை பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டேன், அவர்களில் கணிசமானவர்கள் அரசியல் நாட்டம் இல்லாதவர்கள். இவர்களின்  நிலை பரிதாபம் தான். யாரவது போன் செய்தால் நலம் விசாரிப்பதை போல உங்க ஊர்ல அரசியல் நிலவரம் எப்படி என்று கேட்டறிவதை வழக்கமாக வைத்திருந்தேன்.
சரி வாங்க கதைக்கு போகலாம், கதையின் நாயகன் தேர்தல் ஆணையமா அல்லது வாக்காளனா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அரசியல் கட்சிகள்  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டுக்குழுக்களை அமைத்து பேரங்களை  துவக்கின. பற்பல குழப்பங்களை சந்தித்த கட்சிகள், ஒருவழியாக  யாருடன் கூட்டு, கொள்ளையடிக்கபோவதில் யாருக்கு எவ்வளவு பங்கு மற்றும் யார் எங்கு கொள்ளையிடுவது என்ற விவரங்கள்  அடங்கிய   ஒப்பந்தங்களில்  கையெழுத்திட்டுக்கொண்டன.  கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் பரவாயில்லை கலைஞர் ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக வேண்டும்(வரலாறு நமக்கு மிகவும் முக்கியம் அல்லவா? 100 வருடங்களுக்கு பிறகு வரப்போகிறவர்களுக்கு நாம் எப்படி பட்டவர் என்பது தெரியவா போகிறது? ) என்ற முனைப்புடன்  காங்கிரஸ், முக்கிய சாதி கட்சிகளாக தங்களை   பிரகடனப்படுத்திகொள்ளும் பா.ம.க , வி.சி  மற்றும் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு தேர்தல் களம் இறங்கினார். மறுமுனையில் ஜெயலலிதா தனித்து தான் ஆட்சியமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் விஜயகாந்த், இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு களம் இறங்கினார். இந்த கூட்டணிகளில் கவனிக்கப்பட வேண்டிய இரு முக்கியமான விஷயங்கள் 1. ஐந்து  ஆண்டுகள்  கூடவே  இருந்த  வைகோ வை அதிமுக கழட்டி விட்டது.  2 . எப்பொழுதுமே  எலியும்  பூனையுமாக  இருக்கும் இரு சாதி கட்சிகள் ஒரே அணியில் இடம் பெற்றிருப்பது.
இதுவரையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டு பிரச்சனைகளை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த தமிழக நாளிதழ்கள், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் ஈர்க்கப்பட்டு ஆணையத்தின் செயல்பாடுகளையும் சேர்த்து வெளியிட ஆரம்பித்தன. ஓரு பக்கம் அரசியல் கட்சிகளின் தீவிர தேர்தல் பிரச்சாரம். மறுபுறத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள், தினசரி பணம் பறிமுதல் செயப்பட்ட விவரங்கள் அகியவற்றையும் சேர்த்து வெளியிட ஆரம்பித்தன. நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் மேற்கொண்ட உண்மையான முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்பதை கிழ்வரும் துணுக்குகள் உறுதிப்படுத்துகின்றன. 1.தினந்தோறும் வெளியான பணப்பறிமுதல் தொடர்பான செய்திகள். 2.ஆட்சியில் இருந்துகொண்டே அறிவிக்கபடாத அவசரநிலை நடைமுறையில் இருப்பதாக  கூறும்  திமுகவின் புகார் 3.உயர்நீதி மன்றம், தேர்தல் ஆணையத்தை சர்வாதிகாரி போன்று  செயல்படுவதாக  கண்டித்தது. 4.வணிகர் சங்கங்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறுவணிகர்களுக்கு பெருந்தொந்தராவாக இருப்பதாக கூறியது. இவற்றை வைத்து பார்க்கும் போது  ஆணையம் ஒரு நேர்மையான  தேர்தலை  நடத்த முயன்றிருப்பது புலப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் உற்சாகமடைந்த நான் வாக்களிக்க என் ஊருக்கு சென்றேன். அதிர்ச்சி தான்   காத்திருந்தது எனக்கு, எனது குடும்பத்தில் மொத்தம் மூன்று வாகுகள். தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அதிமுக சார்பாக வாக்கிற்கு தலா ரூ100/- கொடுக்கப்பட்டதாகவும், தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக திமுக  சார்பாக ஒரு வாக்கிற்கு தலா ரூ100/- கொடுக்கப்பட்டதாகவும் எனது தந்தையார் கூறினார். இந்த பணம் உங்கள் வாக்கின் முடிவை மாற்றாதிருக்கும் வரையில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தான்  கூற  முடிந்தது என்னால். ஆக என் குடும்பம் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ரூ 600/- சம்பாதித்துள்ளது. என்னமோ பணம் பட்டுவாடா  என்றால் அது திமுகதான் என்றொரு கருத்து நிலவுகிறது எனக்கொன்றும் அப்படிதோன்றவில்லை. ஒருவர் சம்பாதித்ததை கொடுக்கிறார், மற்றவர் சம்பாதிக்க  முதலீடு செய்கிறார். வ்வளவுதான் வேறுபாடு.  இவ்விரு கட்சிகளின் தேர்ததல் அறிக்கைகள் மீன் பிடிக்க  தூண்டிலில் வைக்கப்படும் உணவைத்தான் நினைவு படுத்துகின்றன. தேர்தல் நாள் காலையில் நீண்ட வரிசையை  தவிர்க்க  சீக்கிரமாகவே சென்று வாக்களித்துவிட்டு திரும்பினேன். இந்த தேர்தலில் என்னை மிகவும் கவர்ந்தது புகைப்படத்துடன் கூடிய வாக்களர் சீட்டுதான்.
என் நண்பர் ஒருவர் வாக்களிக்க ஊருக்கு வந்துள்ளதாக கூறியிருந்தார் அவரை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பும்போது,  எதிர்பட்ட  எங்க ஊர் பாட்டி  ஒருவர் என்னை நலம்  விசாரித்து விட்டு,  "வோட்டு போடறதுக்கா மெட்ராஸ்ல இருந்து வந்து இருக்க ? " என்று வினவினார். அவர்கேட்ட மற்றுமொரு கேள்வி என்னை அதிர்சிக்குள்ளகியது. "நம்ம யாருக்கு வோட்டு  போட்டோம்ங்றது   யாருவேனாலும் தெரிஞ்சிக்கலாமாமே, அப்டியா?" என்றார்   "யார் சொன்னது?" என்று கேட்டேன் . ஒரு கட்சிக்காரரின் பெயரை சொல்லி அவர் “நீ யாருக்கு வோட்டு போட்ட னு, நான் கண்டு புடிச்சிடுவேன்” என்று மிரட்டியதாக கூறினார். இவ்வாறெல்லாம் மிரட்டி வாக்கை பெறுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது தேர்தல் ஆணையத்தின் முயற்சி முழு பலனை அளிக்குமா? என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. மற்றுமொன்று  என்னை மிகவும் பாதித்தது அது சாதி எனும் அரக்கன் இந் தேர்தலிலும் முக்கிய பங்கு வகித்ததுதான். வாக்காளனின் இந்த சாதித்துடிப்பை அறிந்துதான் கலைஞர்  எதிரும் புதிருமான  இரு கட்சிகளை  வளைத்து  போட்டாரா?  ஆனால் இது அவருக்கு சாதகமாக அமையுமா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நான் அறிந்தவரை மேலே குறிப்பிட்ட  இரு  கட்சிகளின்  தொண்டர்களும்  ஒருவருக்கொருவர் ஆதரித்து  வாக்களிக்க முழுமனதோடு தயாராக இல்லை. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம். உண்மையிலேயே கூத்தாடிக்கு கொண்டாட்மா  இல்லையா என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். கல்யாணங்களில் மட்டுமே சாதி வாழ்ந்து கொண்ட்டிருப்பதாக நான் கருதி வந்தது உண்மை இல்லை எனப்பட்டது. பெரியார் சாதி என்ற நெருப்பை நீரூற்றி அனைக்க முயன்றிருந்தாலும், நாம் சாம்பல் என்றென்னி கால் வைத்தால் இன்றும் சுடத்தான் செய்கிறது. அவர் தம் முயற்ச்சியினால் தமிழர்களின் பெயர்களில் ஒட்டி இருந்ததை அழித்துவிட்டார் என்பதே பெரும் சாதனை தான்.
தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் நகர்ப்புறங்களிலாவது பலன்  அளித்திருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும்  வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பின்  முக்கியத்துவம் பற்றிய ஆணையத்தின் பிரச்சாரம் பலன் அளித்திருக்கிறது என்பதை பதிவான சராசரி  வாக்கு விகிதம் 77% ஆக இருப்பதிலிருந்து நாம் அறிய முடிகிறது. தேர்தல் ஆணையம்  கீழ் வருவனவற்றையும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 1. 49 - ஒ பதிவுசெய்ய தனி பொத்தானை கொடுத்திருக்கலாம் 2 . வாக்களியுங்கள்  என வலியுறுத்திய  ஆணையம் ஒரு கட்சிக்காக வாக்களிப்பதை விட நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று   விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் மூலம், கட்சிகளை நல்ல வேட்பாளர்களை  தேர்வுசெய்ய  நிர்பந்திக்க முடியும் என நம்புகிறேன். 3. வேட்பாளர்களின் சொத்து விபரம் மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்களை வாக்களர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும், பெரும்பாலான வாக்களர்களுக்கு தமது  தொகுதியில் எத்தனை  வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர் யார் யார்  போட்டியிடுகின்றனர் என்பது குறித்து அறிந்திருப்பதில்லை.

Wednesday 20 April, 2011

வேண்டும் ஓர் வேளாண் புரட்சி…..!!!!!!!

அன்று மாலை சமையல் செய்யலாம் என்று முடிவு செய்து, கடைக்கு காய்கறி வாங்க சென்றேன். ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு என்று கேட்ட போது, இன்றைய விலை 130 ரூபாய் என்று பதில் வர அதிர்ந்து போனேன். 1 /2 கிலோ வாங்க சென்ற நான் 1/4 கிலோவுடன் திரும்பினேன். முன்தாக வெங்காயத்தின் விலை ரூ.90 ஐ தொட்டது என்ற செய்தியை இணையத்தில் படித்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றிவே கைபேசியில் எனது தந்தையை அழைத்து, நம்ம ஊர்ல வெங்காயம் எப்படி போகுது என்று கேட்டேன். இப்போ நம்ம நிலத்துல வெங்காயம் இருந்திருந்தா நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்று சொல்லிவிட்டு, பக்கத்துக்காட்ல  ஒரு குவிண்டால் (100  கிலோ) 3500 ரூபாய்க்கு வியாபாரியே நேரில் வந்து வாங்கிச்சென்றதாக கூறினார். வெங்காயம் சொகுசு வண்டியில் பயணித்து வந்ததோ? என்ற சந்தேகம் தான் எழுந்தது. 65  கிலோ எடை கொண்ட நான், எனது சொந்த கிராமமான வி.அலம்பலத்திலிருந்து  (விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம்), சென்னையில் உள்ள சோழிங்கநல்லூருக்கு அரசு பேருந்துகளில் வந்து சேர்வதற்கு 85  ரூபாய் தான் செலவாகிறது . ஆனால் ஒரு கிலோ வெங்காயம் எனது கிராமத்திலிருந்து சென்னைக்கு வருவதற்கு  95  ரூபாய் செலவழித்திருக்கிறது என்று கணக்கிடும்போது, நான் மிகவும் வேதனையடைந்தேன்.
கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் சார்பாக எனது முதல் கோரிக்கை இதுதான், இடைத்தரகை முற்றிலுமாக (குறைந்தபட்சம் வேளாண் பொருட்களின் கொள்முதல்-விற்பனையிலாவது)  ஒழிக்கவேண்டும். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளை தொடங்குவதில் எனக்கு  உடன்பாடில்லை. ஏனெனில் தொழிற்சாலையுடன் அழையா விருந்தாளிகளாக வருவ சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தான். நமது பாரம்பரிய தொழிலை விடுத்து ஏன் புதியதை தொடங்கவேண்டும்? இடைத்தரகை அகற்றி புதிய  வேலை வாய்ப்புகளை உருவாக்க, ஒன்றியம் தோறும் அல்லது குறைந்தபட்சம் தாலுக்கா அளவிலாவது, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக்கூடம் அமைக்கப்பட வேண்டும். இது விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஒரு தளமாக செயல்படவேண்டும். இதன்மூலம் வேலூரில் உள்ள பருத்தி விவசாயி, தனது பருத்தியை கோவை வியாபாரியிடமும், கள்ளக்குறிச்சியில் உள்ள மஞ்சள் விவசாயி தனது மஞ்சளை சென்னை வியாபாரியிடமும் நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
எனது பகுதி விவசாயிகளிடம் உரையாடியதிலிருந்து மற்றொரு பிரச்சனையான “ஆட்கள் பற்றாக்குறை” யின் வீரியத்தை நான் அறிந்துகொள்ள முடிந்தது, இதற்கு முக்கிய காரணங்கள். 1)மத்திய அரசின் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்.                             2)வேலை உடல் உழைப்பைச் சார்ந்ததாக உள்ளது.                                                         
தற்பொழுது விவசாயம் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், வேறு வேலை அல்லது தொழில் செய்ய வாய்ப்பு இல்லாதவர்களாக தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாய்ப்பு கிட்டுமாயின் நிச்சயமாக வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். இது மிகவும் வேதனைக்குறியதாகும். மத்திய அரசின் 100 நாள் திட்டத்தை மாநில அரசும் உள்ளாச்சி அமைப்புகளும் முறையாக பயன்படுத்தியிருந்தால், ‘புதிய தலைமுறை’ சுட்டிக்காட்டிய வெள்ளச்சேதத்தை முற்றிலுமாக தடுத்திருக்கலாம். எனது கிராமத்தில் நடந்ததை பதிவு செய்ய விரும்புகிறேன். 100 நாள் வேலை திட்ட பயனாளர்களான என் ஊர் பெண்களிடம் கேட்டேன், “அப்படி என்ன வேலை ஏரியில் செய்றிங்க?”, அவர்கள் சொன்னது இதுதான், “மண்ணை ஒர் இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தில் கொட்டுவோம்”. “எதற்காக செய்றிங்க?” என்று கேட்டதற்கு “ஏதாவது செய்ய வேண்டுமே அதான்!” என்றனர். உண்மையில் அவர்கள் தினமும் ஏரிக்கு சென்று ஒவ்வொருவரும் 10 கூடை அளவிலான மண்னை ஓரிடத்திலிருந்து வெட்டி மற்றொரு இடத்தில் கொட்டிவிட்டு, மீதமுள்ள பொழுதை அங்குள்ள மரங்களின் நிழலில் கழித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 3 மாதங்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததில் ஏரிக்கரை உடைப்பு ஏற்பட்டது. இரு கிராம பொதுமக்கள் சேர்ந்து உடைப்பை சரிசெய்தனர். முழுமையான உடைப்பு எற்ப்பட்டிருந்தால், 500 ஏக்கர் நெற் பயிர்களும், ஒரு கிராமம் முழுமையாகவும் மூழ்கியிருக்கும் அபாயம் உள்ளது. 250 பேர் 100 நாட்கள் ஏரியை சீரமைத்து இருக்கிறார்கள், ஆனால் கரை உடைப்பை தடுக்க முடியவில்லை. இது மதிரியான திட்டங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்வது உள்ளாட்சி அமைப்புகளின் கையில்தான் உள்ளது.
எனது இரண்டாவது கோரிக்கை, விவசாய மாவட்டந்தோறும் ஒரு வேளாண் ஆய்வு மையத்தை ஏற்படுத்தவேண்டும், இம்மையத்தின் பணிகள் கீழ்கண்டவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
1)அந்தபகுதி விவசாயத்துக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்க்கொள்வது.
        2)விவசாயத்திற்கு இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்வது.
        3)இந்த அமைப்பின் ஒரு அங்கமாக வேளாண் ஆலோசனை மையத்தினை
 அனைத்து   
         ஒன்றியங்களிலும் அமைக்க வேண்டும். இந்த துணை அமைப்பு இதன் தாய் அமைப்பின்   
         ஆய்வு
முடிவுகளை அப்பகுதி விவசாயிகளுக்கு தெரிவிப்பதுடன், அவற்றை பயன்பாட்டிற்கு
         கொண்டுவர முனைதல் வேண்டும். மேலும் இவ்வமைப்பு அனைத்து நிலைகளிலும்
         விவசாயிகளுக்கு ஓர் ஆலோசனை மையமாக திகழ வேண்டும்.
இதன்மூலம் வேளாண் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களை இத்துறைக்கு ஈர்க்கமுடியும். இன்றைய விவசாயம் உடல் உழைப்பு சார்ந்ததாக இருப்பதனால்தான் இத்தொழில் நலிவடைந்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப தொழில்நுட்பத்தையும், இயந்திரங்களையும் பயண்பாட்டிற்குக் கொண்டுவந்தால், இளைஞர்களை வேளாண் தொழிலுக்கு கவர்ந்திழுக்க முடியும், பிறகு வேளாண் புரட்சி ஏற்படுவதை யாராலும் தடுக்க இயலாது.