Sunday, 18 September 2011

பயணம் – இனிப்பும் கசப்பும்!


அன்று அந்த அதிவேக ரயிலில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். ஆம் சவுண்ட் ஸ்பீட் ட்ரெயின் சர்வீஸ்(SSTS) என அழைக்கப்படும் ரயில். அதாவது மணிக்கு 1200 கி.மீ என்பது இந்த ரயிலின் உச்சபட்ச வேகம். குறைந்தது மணிக்கு 1000 கி.மீ கியாரண்டி என்கிறார்கள். இது ஒலியின் வேகத்தை விட சற்றே குறைவானாலும் இந்த ரயிலை அப்படிதான் அழைக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பத்திரிகைகள், இந்தியாவில் ஒலியின் வேகத்தில் பயணிகள் ரயில் என கூவின. முன் பதிவு செய்யப்பட்ட பயனசீட்டுடன் ஆட்டோவில் ஏறி அமர்தேன். எஸ்.எஸ்.டி.எஸ் ஸ்டேஷன் போகணும் என்றேன். ஆட்டோ முடுக்கப்பட்டது. சிறிது நேர ஆட்டோ பயணத்தில் ஸ்டேஷனை அடைந்தேன்.


ஒரேயொரு பிளாட்பார்ம் தான் இருந்தது. அதனால் நான் செல்ல வேண்டிய ரயிலை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. மொத்தம் 7 பெட்டிகள் அதில் 5 பயணிகளுக்கு. முதல் பெட்டி செலுத்துனர் கட்டுப்பாட்டு அறை. கடைசி பெட்டி பயணிகளுக்கான சேவை மையப்பெட்டி. உள்ளே நுழைந்ததும் இது இரயிலா இல்லை விமானமா என்ற கேள்வி உதித்தது. காரணம் ரயிலின் உள் கட்டமைப்புகள் தான். எஸ்.எஸ் இரண்டில் 45ஆவது இருக்கை என்னுடையது, அதிர்ஷ்டவசமாக அது ஜன்னல் ஓர இருக்கை. கண்ணாடி ஜன்னல்கள் தான். ஆனால் சற்று தொலைவில்லுள்ள பொருட்களை மட்டுமே கானமுடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிவேகத்தில் அருகிலுள்ள பொருட்களை பார்க்கும்போது மயக்கம் வரக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. சற்று நேரத்தில் சீட் பெல்ட் அணிய சொல்லி ஒலிபெருக்கி கத்தியது. சேவையாளர் ஒருவர் வந்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்று பார்த்து சென்றார்.

சிறிது நேரத்தில் ரயில் முடுக்கப்பட்டது, தரையில் முதல்முறையாக அதிவேகத்தில் செல்ல போகிறேன் என்பதால் ஒருவித பயம் கலந்த குஷியில் இருந்தேன். திடீரென டம், டம் என்ற சத்தம் காதை பிளந்தது, தடம் புரண்டுவிட்டதோ என்ற பயம், விழித்துக்கொண்டேன். அட ச்சீ.. அல்ப்ப கனவு. நான் எங்கு இருக்கிறேன்? டம், டம் என்ற சத்தம் நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து வந்தது. டீ.. காப்பி.. சப்ட்ரவங்க சாப்பிடலாம் என்றான், கையில் உள்ள தடியையும், பேருந்தில் உள்ள தகரத்தையும் வைத்து ஒலி எழுப்பிகொண்டிருந்த ஒரு வீனாப்போனவன். ஆம் அந்த பேருந்தில் தான் அமர்திருக்கிறேன். நான் நாளை நடக்க இருக்கும் என் பள்ளிக்கால நண்பனின் திருமணத்திற்காக என் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன். கைபேசியை எடுத்து மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. அந்த தடியடியன் மீது கோபம் பன்மடங்கானது. முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூதாட்டி பல சாபங்களை தடியடியனுக்கு விட்டாள். அனைவரையும் எழுப்பிவிட்டு அந்த தடியடியன் வேறொரு பேருந்தை நோக்கி நடந்தான். 

பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். அந்த ஹோட்டலை பார்த்தவுடன். விழுப்புரதிற்கு அருகில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொண்டேன். அடிவயிறு முட்டியது. சாலையோரத்தில் கழிக்கலாம் என அந்தபக்கம் சென்றேன், இன்னொருவன் தடியை வைத்துக்கொண்டு இங்கல்லாம் போககூடாது. உள்ள இருக்கிற டாய்லெட்ல தான் போகணும் என்றான். வேறுவழியின்றி அந்த கமகமக்கும் கழிவறைக்கு சென்றேன். ஒன்னுனா மூனு ருவா, ரெண்டுனா அஞ்சி ருவா என்றான். மூன்று ரூபாய் கொடுத்து சென்றுவந்தேன். மூன்று ரூபாய் கொடுப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தால். இந்த சாலையோர ஹோட்டல்களை பற்றி முன்பே எனக்கு தெரியும். இந்த வழித்தடம் எனக்கொன்றும் புதிதல்ல. இங்குள்ள பொருட்களை அதிகபட்ச விலையில்(M.R.P)  150%-200% கொடுத்துதான் வாங்கமுடியும். ஈ மொய்க்கும் அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட கிட்டத்தட்ட சரவணபவன் ரேஞ்சிக்கு பில் கட்ட வேண்டிவரும். எனவே எதையும் வாங்க முற்படாமல் வண்டியில் ஏறி அமர்ந்தேன். நம்மவர்களை இப்படி பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பு நிகழ்ந்தபோது  ஜப்பானியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று நாம் அனைவரும் இணையத்தில் படித்திருப்போம். இக்கட்டான சூழ்நிலையில் ஜப்பானியர்கள் நடந்துகொண்ட விதத்தினை அழகாக தொகுத்து புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதனை சுட்டு இங்கு இணைத்துள்ளேன். அதனை படித்தால் நெகிழ்ச்சி உணரப்படுவது நிச்சயம். நம்மவர்களிடம் அடிப்படையிலேயே ஏதோ தவறு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
நன்றி: புதிய தலைமுறை

படத்தில் கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம்.

பல்வேறு குழுக்கள் கறுப்புப்பணத்தை மீட்டுவர குரல்கொடுகின்றன. ஆனால் எந்த ஒரு குழுவும் கறுப்புப்பணம் உருவாகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சொல்வதாக எனக்கு தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட ஹோட்டலை போல சிறிய அளவில் ஆனால் மிகப்பெரும் எண்ணிக்கையில் கறுப்புப்பணம் உற்பத்திசெய்யப்படுகிறது. மிகப்பெரும் எண்ணிக்கையில் குற்றம் நடந்தால் நம்நாட்டில் அது ஏனோ குற்றமாகக் கருதப்படுவதில்லை. அரசு/ சட்டம் என்ன சொல்கிறது? வரி செலுத்துவது குடிமக்களின் கடமை என்கிறது. இந்த காலத்தில் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை எதிர்பார்க்க முடியாது. அதனால் வரியை ஒழுங்காக வசூலிப்பது அரசின் தலையாய கடமையாக இந்த குடிமகன் நினைக்கிறான். அரசு மாத வருமான காரர்களிடம் எளிதில் வருமான வரியை வசூலித்து விடுகிறது எப்படி? கார்பரேட் கம்பெனிகளிடம், உங்கள் எம்ப்லாய் களின் வருமான வரியை செலுத்தினால் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அதை சாதித்து கொள்கிறது. கார்பரேட் கம்பெனிகள் நம்மிடமிருந்து புடுங்கி அரசிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிகொள்கிறது. ஊர்ல சொந்த பிஸ்னஸ் செய்றவன் எல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரேவொரு வேலையை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! அய்யோ.. ய்யோ.. ய்யோ.

ஆக யாரும் மனமுவந்து வரி செலுதப்போவதில்லை. அரசு தனது வசூலிக்கும் இயந்திரத்தை(அமைப்பு / சட்டம்)  தூசு தட்டி இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் பழுது பார்க்கவேண்டும் அல்லது தூக்கி எறிந்துவிட்டு புதிய இயந்திரத்தை வடிவமைக்க வேண்டும். இயந்திரத்தை இயகுபவர்களுக்கு உரிமம் வழங்கும்  வழிமுறைகளில்(தேர்தல்) நிறைய மாற்றம் கொண்டுவரவேண்டும். இயந்திரத்தை சரியாக இயக்கவில்லை எனில் உரிமம் உடனடியாக ரத்து செய்யக்கூடிய உரிமையை உரிமம் வழங்கியவர்களுக்கு கிடைத்திட வழிசெய்தல் வேண்டும். நம்மவர்கள், வரி கொடுத்தால் அரசு அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர் என்றும் சொல்லி தாங்கள் வரி செலுத்தாததை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு குடிமகன் தனது கடமையைச் செய்யவில்லையெனில் அவன் அரசை தட்டி கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். காசு வாங்கிக்கொண்டு ஒரு சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினரை தேர்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் தனது தொகுதிக்கு நலத்திட்டங்களை கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். அரசும் குடிமக்களும் மாறிமாறி குற்றம் சுமத்துவதை விடுத்து ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யவேண்டும்.

பயணம் தடம்புரண்டு எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறது. சரிவிடுங்கள் புலம்பல்கள் இப்படிதான் இருக்கும். இது எல்லாத்துக்கும் அந்த தடியடியன் தான் மூலகாரணம். அவன்மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது ஏனெனில், நான் பயணம் செய்தது தந்தை பெரியார் (என அந்த காலத்தில் அழைக்கப்பட்ட) சிவப்பு நிற விழுப்புரம் டிப்போ பேருந்தில். அந்த பேருந்தில் தூங்கமுடிவதே பெரிய அதிசயம். அப்படி இருக்கும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அதுவும் இரவு 2 மணிக்கு எழுப்பி இருக்கிறான். நீங்கள் அனுபவித்தால்தான் உணரமுடியும் அதன் வலியை. அந்த மூதாட்டி அவனுக்கு விட்ட சாபங்கள் அனைத்து பலிக்கட்டும். அவன் மட்டுமே முழுமுதற் காரணம் அல்ல, பின்னிரவுகளில் வண்டியை உணவகத்திற்கு விடும் அந்த பேருந்து ஓட்டுனரும்தான். எப்படியும் மீண்டும் தூங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே அந்த கனவை ஆராய்ச்சி செய்ய முற்பட்டேன். எனக்கு கலைந்த கனவில் சில பல சந்தேகங்கள் எழுகிறது. கனவில் நடந்து எந்த கால கட்டத்தை சேர்ந்தது? நான் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு போக முற்பட்டேன்? அதே கனவிற்கு மீண்டும் செல்ல வழி இருந்தால் இந்த கேள்விகளுக்கு விடை தேடி இருக்கலாமே!! ஒருவேளை 2050- நடக்கபோகும் நிகழ்வாக இருக்குமோ? ஒருவேளை சென்னையிலிருந்து – கள்ளக்குறிச்சிக்கு போக முனைதிருப்பேனா?(ஆச.. தோச.. 250 கி.மீ தூரத்துக்கு SSTS கேக்குதா?). சரி ஒலியின் வேகத்தில் ரயில் பயணம் சாத்தியம் தானா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஒலியின் வேகம் என்றவுடன் சிறுவயது பிளாஷ்பேக் நிழலாடியது. ஏர் ஓட்டி கொண்டிருந்த அப்பா டேய்ய்... முருகேசா... தண்ணி கொண்டா என்று கத்தினார். எனக்கும் அவருக்குமான இடைவெளி சுமார் 100 மீட்டராவது இருக்கும்.  நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி நடக்க ஆரப்பிதேன். அவர் கலப்பையில் மண்ணை களைகொத்தியால் தட்டி கொண்டிருந்தார், டக் .. டக் என்ற சத்தம் கேட்டது. அவருடைய செய்கைக்கும் கேட்கும் சத்தத்திற்கும் சிறிய நேர இடைவெளி இருப்பதை என்னால் உணரமுடிந்தது. இது ஒளிக்கும் ஒலிக்குமான வேக வேறுபாட்டினால் தான் என்பதை பலவருடங்கள் கழித்து அறிவியல் பாடத்தில் தெரிந்துகொண்டேன்.

ஒளியின் வேகம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த அண்டவெளியும் கோள்களும் தான். ஏனென்றால் கோள்களுக்கு இடைபட்ட தூரத்தை ஒளியாண்டுகள் என்ற அலகினால் கணக்கிடுகின்றனர். இந்த நாசமா போன நாசா போன வாரம் கூட பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பூமியை போன்ற ஒரு கோளை கண்டுபிடித்ததுடன் அங்கு உயிர்கள் வாழ வாய்புள்ளது என்கிறது. இதெல்லாம் உண்மையா இல்லை காதில் பூசுத்துகிறார்களா? எனக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது ஏனென்றால் சமீபத்தில் அப்போலோ விண்கலம் நிலாவில் இறங்கிய தடையங்களை தெளிவான தோற்றத்துடன் கூடிய படங்களாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து அப்போலோ விண்கலம் தரையிறங்கிய இடங்களை பாதுகாக்க நிலாவில் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது. நாசாவின் இந்த நடவடிக்கைகள், நான்தான் முதலில் நிலவில் கால்வைத்தேன் என்கிற பழய பஞ்சாகத்தை உறுதியாக பிடித்து கொண்டிருபதுப்போலும், மற்ற நாடுகள் யாரும் எங்களை வெரிஃபை பண்ண கூடாது என்பது போலும் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சீனா நீங்க எல்லாம் ஆலமர சைஸ்ல இருக்கிற ஆணியவா புடுங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிங்க? ஆணி சொந்தமா புடுங்க முடியலைனா நாசா புடுங்கி போட்ட ஆணி எல்லாம் சரியான்னு பாத்து சொல்ல வேண்டியதுதான. மனசு கெடந்து தவிக்கிதுல்ல?

எனக்கு கனவு இனிக்கிறது. நிஜம் கசக்கிறது. அய்யா இன்செப்சன் டாக்டரே.. சாரி.. டைரக்டரே.. என்னை எப்பாடுபட்டாவது கனவுலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.




Thursday, 18 August 2011

நாவற்பழ வேட்டை!


சென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அன்று ஆகஸ்ட் 15,  காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா? இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.

“சுதந்திர தின வாழ்த்துக்கள்!! கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”

என்ற குறுஞ்செய்தியை (??) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10.  எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம்.  தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30  நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10  ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.


களா பழம்

இலந்தை பழம்


சைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10  ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.




குரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

தம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.
<அடர்ந்த காட்டின் காலைப்பொழுதில்,

மான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.

சிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>

ஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.

மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.

தம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித  ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.


காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!

Wednesday, 3 August 2011

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அரங்கேறும் ஓர் அற்புதம்!




இவ்வாண்டு நடைபெறும் பொறியியல் கலந்தாய்விற்கு இருமுறை செல்ல வாய்ப்பு கிட்டியது, முதல் முறை என் ஊர் மாணவர் ஒருவருக்காகவும். மறுமுறை சொந்தகார மாணவிக்கு. அண்ணா பல்கலைக்கழக வளாகம் - தம்மிடத்தில் குழுமி இருக்கும் வருங்கால பொறியாளர்களை கண்டு பெருமிதமடைகிறது. அங்கிருந்தவர்களை பார்த்தமட்டில் என்னால் இருவகையாக பிரிக்க முடிந்தது.

முதல் வகை – நன்கு படித்த தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும் நகரத்தில் வசிப்பவர்கள். ஒருவரின் கலந்தாய்விற்காக ஒரு முழு குடும்பமே வந்துள்ளது. இந்த மாணவர் அல்லது மாணவியர் கண்களில் எதிர்கால கனவுகள் சிறகடிக்கின்றன. இவர்கள் தங்களின் தேவையை தெளிவாக பலமுறை அலசி ஆராய்ந்து தங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தெரிவு ஒன்று, இரண்டு, மூன்று... என்று வரிசைப்படுத்தி, தங்களுக்கான முறை எப்பொழுது வருமென்று காத்திருப்பவர்கள்.

இரண்டாம் வகை – படிக்காத தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும்  கிராமத்தில் வசிப்பவர்கள். இவர்கள் தந்தை மற்றும் தனது ஊரில் படித்த ஒருவருடன் வந்துள்ளனர். இவர்களுக்கு எங்கு செல்வது என்ன செய்வது என்று புரியாமல், ஒருவித தயக்கத்துடன் காணப்பட்டனர். மாணவன் அல்லது மாணவியின் கண்களில் ஒருவித மிரட்சியை காணமுடிந்தது. இந்தவகையில் முதல்முறையாக சென்னைக்கு வருபவர்கள்தான் அதிகம். சென்னையின் பிரமாண்டம் இந்த மிரட்சியினை ஏற்படுத்தி இருக்கலாம். மேலும் இவர்கள் இங்குள்ளவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்பதாலும் தயக்கம் இவர்களுடன் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தபின், மாணவ மாணவியருடன் வந்தவர்கள் வெளியே அனுப்ப படுவார்கள். பிறகு மாணவ மாணவியர்கள் மேல் தளத்திற்கு சென்று தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டு அரங்கிலிருந்து வெளியேறவேண்டும். இதுதான் நடைமுறை. மகளுடன் வந்த தந்தை ஒருவர் தனது மகளை தனியே அனுப்ப மறுத்து, பணியிலிருந்த கவலருடன் சண்டைபோடுகிறார். காவலரோ அவரை வெளியே அழைத்து வந்து, நடைமுறையை விளக்குகிறார். இருப்பினும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். அரங்கின் வாயிற்படியில் 15 நிமிடங்கள் காத்திருந்து தனது மகளுடன் வெளியே வருகிறார்.


சரி, இந்த இருதரபினர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புற மாணவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு இருந்தது, ஏதேதோ காரணங்களுக்காக 2001 –ஆம் வருடம் இந்த ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டது. இப்பொழுது இதனை தமிழக அரசு வேறு வடிவில் செயல்படுத்துகிறது. முதல் பட்டதாரி மாணவ -மாணவிகளுக்கு உயர் கல்வி கட்டணத்தில் குறிப்பட்ட தொகையை குறிப்பிட்ட படிப்புகளுக்கு அரசே ஏற்கும். இத்திட்டதைதான், பதிவின் தலைப்பில் வர்ணித்துளேன்.


மேலே பார்த்த அட்டவணை பொறியியல் கல்விக்கான கட்டணச் சலுகை ஆகும். இதேபோல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தில் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகை சாதி, வருமானம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதுதான் முக்கியமாக குறிபிடத்தக்கது.

பள்ளி கல்வியில் பல குழப்பங்களுக்கிடைய சிக்கித்தவிக்கும் தமிழக அரசை இந்த திட்டத்திற்காக பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. சீக்கிரமே சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் போன்ற பிரச்சனைகளில் நல்ல முடிவை
எடுக்க வாழ்த்துகிறேன்.

தொட்டதுக்கெல்லாம் துள்ளி குதிக்கும் அரசியல்வாதிகள் எங்கே? இந்த திட்டத்தை பாராட்டி ஒரு அறிக்கை விடலாமே. குறை சொல்வது மட்டும்தான் இவர்களுக்கு தெரியுமா?

பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், வருமான சான்றை போல் அல்லாமல், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கடைசி வரை உண்மையானதாகவே இருக்கட்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மற்றொன்றையும் கவனிக்க தவறவில்லை, தனியார் பொறியியல் கல்லூரிகள், விரிவுரையாளர்களை ஏவி தங்கள் கல்லூரியில் சேர ஆட்கள் பிடிக்கிறது. கலந்தாய்வு முடியபோகும் தருவாயில், இன்னும் 16 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரப்படாமல் இருப்பதுதான் வேடிக்கை.

கல்லூரிகளின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் கல்லூரி முதலாளிகள்தான். எ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைகிறது என்பதற்காகவே பல கல்லூரிகளை ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு கல்லூரியை எப்பாடுபட்டாவது நல்ல கல்லுரி என்ற பெயரை பெறவைத்துவிட்டு, அதே பெயரில் (மிகச்சிறிய வித்தியாசத்தில்) பல கல்லூரிகளை உருவாகிவிட்டால், லாபம் பன்மடங்காகும் என்ற பேராசைதான். இதனால் மாணவர்களும் எது போலி எது உண்மை என்பதை கண்டறிய சிரமப்பட வேண்டியிருக்கிறது.

பத்து ஆண்டுகளில் முன்பிருந்ததைவிட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது, மாணவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயரவில்லை.

ஆகவே கல்லூரி முதலாளிகளே, தங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தால், ஒன்றை அறிவியல் / கலை கல்லூரியாக மாற்றிவிடுங்கள். இப்பொழுது அதற்குத்தான் நல்ல மவுசு. மேலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் யோசனை கூறுவதற்கு கூட காசு கேட்பார்கள், ஆனால் நான் அப்படி இல்லை. எனது யோசனையை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.