Thursday, 18 August, 2011

நாவற்பழ வேட்டை!


சென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அன்று ஆகஸ்ட் 15,  காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா? இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.

“சுதந்திர தின வாழ்த்துக்கள்!! கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”

என்ற குறுஞ்செய்தியை (??) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10.  எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம்.  தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30  நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10  ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.


களா பழம்

இலந்தை பழம்


சைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10  ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.
குரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

தம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.
<அடர்ந்த காட்டின் காலைப்பொழுதில்,

மான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.

சிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>

ஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.

மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.

தம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித  ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.


காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!

24 comments:

காந்தி பனங்கூர் said...

அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.

காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!

கடைசியாக அருமையா ஒரு செய்தி சொல்லியிருக்கீங்க நண்பா. மலரும் நினைவுகள்.

விலாம் பழம் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன களா பழம். முடிந்தால் அதோட படத்தை போடுங்கள். நன்றி

குடிமகன் said...

@ காந்தி பனங்கூர் – படத்தை இணைத்துவிட்டேன், பதிவில் சில மாற்றங்களையும் செய்துள்ளேன்.. நன்றி!! மீண்டும் வருக!!!

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

பாஸ் உங்கள் பதிவை திரும்ப திரும்ப படித்தேன் பாஸ்
அசத்தல் பதிவு பாஸ்,
உங்கள் பதிவை படிக்கும் போதுதான் நான் எவ்வளவத்தை இழந்து விட்டேன் என்று மனசு பரபரக்குது.
ஆயிரம்தான் இருந்தாலும் இயற்கையை ரசிக்கும்போது கிடைக்கும் சுகமே தனிதான்,

இப்படிப்பட்ட அனுபவம் எனக்கும் சின்ன வயசில் இருந்திச்சு பாஸ் எனது 10 வயது வரை வன்னியில் தான் இருந்தோம். அப்போது அருகில் மிக பெரிய காடு , நானும் தம்பியும் வீடு கட்டி விளையாடுவத்ர்க்காக அதுக்குள் தடிகள் வெட்டி வர போய்விடுவோம், ( அப்பாக்கு தெரிந்தால் அடிதான் காரணம் அப்போது அதற்குள் இலங்கை ராணுவம் வந்து புலிகளுக்காக
மிதிவெடிகளை வைத்துவிட்டு போய் விடுவார்கள்) காட்டுக்குள் போனாலே ஒருவித சத்தம் கர்ர்ர்ர் என்று கேட்டுக்கொண்டே இருப்பது ஒருவித பயத்தையும்
இன்பத்தையும் கொடுக்கும் பாஸ், இன்னொன்னு ஒரு கொடி மரம் இருக்கு அதை வெட்டினால் தண்ணி சல சல என்று தண்ணி வரும்.. முன்பு ஒருமுறை அப்பாவுடன் காட்டுக்கு போன போது , தண்ணி கேட்ட போது அப்பா அதை வெட்டித்தான் தண்ணி தந்தார் அதன் பின் நானும் தம்பியும் தனியே போனாலும் அந்த கோடியை தேடி புடித்து வெட்டி தண்ணி குடிக்காமல் திரும்பியது இல்லை
சில வேளைகளில் அந்த தண்ணி கொடியை தேடி தேடியே காட்டுக்குள் வெகு தூரம் சென்று பயத்தில் அழுது அழுது திரும்பிய நினைவுகளும்
உண்டு. ( பாஸ் அந்த தண்ணி தரும் கொடியின் பெயர் தெரிந்தால் பின்னுடத்தில் தெரியப்படுத்துங்கள்...

குடிமகன் said...

@ துஷி - திரும்ப திரும்ப படித்தமைக்கு நன்றி நண்பரே

நீங்கள் சொல்வது உண்மைதான்.. இயற்கையை ரசிக்கும்போது கிடைப்பது பேரின்பம்..

நீங்கள் சொல்லும் அந்த தண்ணி தரும் கொடி யை நான் அறிந்திருக்கவில்லை.. :(

Anonymous said...

என் கிராமத்து நினைவுகளை உங்கள் பதிவில் கண்டேன்

நன்றி

இளங்கோவன்

குடிமகன் said...

Anonymous - இளங்கோவனின் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really superb post

குடிமகன் said...

"என் ராஜபாட்டை"- ராஜாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி – மீண்டும் வருக!!

அம்பாளடியாள் said...

மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.


உங்கள் கற்பனை வெள்ளோட்டம் இயற்கையை மிஞ்சியது குற்றமில்லையா?....இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் .(எனக்கும் அந்த கொலிவூட்படம் எம்பிட்டால் காட்டுங்களேன் பிளீஸ்...)சரி போனால் போகட்டும் அடுத்த தடவ காட்டுக்குப் போனால் நாவல் பழம்,பாலப்பழம் ,ஈச்சம் பழம் இந்த
முக்கனிகள் மூலம் எனக்கு (அபிசேகம் செய்யும்படி சொன்னா கொஞ்சமாத்தான் வரும்!...) ஒரு படையல் கொடுத்து விடு மன்னித்துவிடுகின்றேன்.
(பொடிப்புள்ள ரொம்பப் பயப்படுறமாதிரித் தெரியுது வேற எதாச்சும் கேக்கலாமா?...வேணாம்-)

சரி நல்லாத்தான் எழுதி இருக்குறாரு அருமை வாழ்த்துக்கள்...............

நன்றி சகோ பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 2

குடிமகன் said...

சகோதரியின் கருத்துரைக்கும் வாக்கிற்கும் நன்றி!

அடுத்தமுறை அம்பாளடியாளுக்கு படையல் நிச்சயம்!

ராமச்சந்திரன் said...

நல்ல பதிவு

குடிமகன் said...

ராமச்சந்திரனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சத்ரியன் said...

களா பழத்தின் புளிப்பு கலந்த இனிப்புச் சுவையும், பிசுபிசுக்கும் வெண்பாலும்..... வாயூறுகிறது.

குடிமகன் said...

@சத்ரியன் – தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

அம்பாளடியாள் said...

உங்கள் அடுத்த பதிவு எப்போது?.....

குடிமகன் said...

அம்பாளடியாள் said...
உங்கள் அடுத்த பதிவு எப்போது?.....

கூடிய சீக்கிரமாகவே!! நேரம் கிடைக்கவில்லை முக்கியமாக மேட்டர் கிடைக்கவில்லை < இதுதான் உண்மை>

எஸ் சக்திவேல் said...

பாதிக்கு மேல் இங்கிலீஷ் கலந்து எழுதுவோரைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கும் எனக்கு உங்கள் தமிழ் கற்கண்டு மாதிரி இருக்கிறது. தொடருங்கள்.

CoolGuy said...

Fantastic... after reading, closed my eyes to get those forest feel... super... We need to plan to your home.... It should me without my mobile and laptop....
(My sys language detector is not working, thats why posted in english)

CoolGuy said...

Definitely am missing you... to discuss these things..

குடிமகன் said...

// எஸ் சக்திவேல் said...
பாதிக்கு மேல் இங்கிலீஷ் கலந்து எழுதுவோரைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கும் எனக்கு உங்கள் தமிழ் கற்கண்டு மாதிரி இருக்கிறது. தொடருங்கள். //

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சக்திவேல்! உங்களை போன்றோரின் ஆதரவுடன் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

குடிமகன் said...

// CoolGuy said...
Fantastic... after reading, closed my eyes to get those forest feel... super... We need to plan to your home.... It should me without my mobile and laptop....
(My sys language detector is not working, thats why posted in english)//

நிச்சயமா பிளான் பண்ணுவோம் விஸ்வா..

புலவர் சா இராமாநுசம் said...

தம்பீ!
நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த என் சொந்த
ஊரை நினைவுபடுத்தி விட்டீர்
அவை என்றும் மறையாத மறவாத
நினைவுகள்!
புலவர் சா இராமாநுசம்

குடிமகன் said...

@புலவர் சா இராமாநுசம் - தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!! பதிவு தங்கள் ஊரை நினைவு படுத்தியதை அறியும்போது மகிழ்கிறேன்

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!