Showing posts with label தி.க. Show all posts
Showing posts with label தி.க. Show all posts

Friday, 23 September 2011

தந்தை பெரியாரை மதத் தலைவராக்க முயற்சியா?


நான் சமீபத்தில் எனது நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அவனுடைய தந்தை ஒரு தீவிர தி.க. அதனால் அந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது. பேச்சாளர்கள் அனைவரும் பிராமண எதிர்ப்பு வாசகங்களை மட்டுமே பிரதானமாக பேசினர். பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் தி.க ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை மட்டுமே பரப்பி வருகின்றன. தி.க. வுக்கு ஒருவேளை செலக்ட்டிவ் அம்னீசியாவோ? பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு இப்படிபட்ட எதிர்ப்புகளை மட்டுமே பரப்புவதாக தெரிகிறது. சாதிக் கலவரமும் மதக்கலவரமும் மலிந்து கிடக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவைதானா? தமிழர்களின் பெயருக்கு பின்னால் இருந்த சாதியை ஒழித்த என் தலைவனின் இயக்க தொண்டர்களா நீங்கள்?
இது அரசியல் இயக்கமல்ல சமூக இயக்கம் என மார் தட்டி கொள்ளும் உங்களுக்கு, கிராமத்து தலித் இன்றும் மற்ற சாதியினருக்கு அடிமையாகவே வாழ்கிறான் என தெரியாதா? அவனுக்கும் மற்றவனுக்குமான இடைவெளியை குறைப்பதற்கு முயற்சி செய்யலாமே?  அதைவிடுத்து திருமண நிகழ்வை ஒரு கொள்கை பரப்பு கூட்டமாக கருதி, சொற்பொழிவாற்றுவது, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது இவையெல்லாம், கல்விக்கூடங்களை கொண்டு கிருத்தவத்தை பரப்பும் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல. மதமே வேண்டாம் என்றுரைத்த பெரியாரை, பெரியாரிசம் என்ற ஒரு மதத்திற்கு தலைவராக ஆக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எழுந்துவிட்டது.
பெரியார், நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார். பெரியாரின் முக்கிய கொள்கையான பகுத்தறிவை நீங்கள் பரப்பவில்லை. பிராமண எதிர்ப்பையும், இந்து எதிர்ப்பையும் பரப்பும் நீங்கள், சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உண்டாக்கும் கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர். அந்தணர்களின் அதிகாரம் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்த அந்த காலகட்டத்தில் பெரியார் நடத்திய அந்தண எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஒருவித நியாயம் இருந்தது. எவ்விதத்திலும் பொருந்தாத இந்தகாலத்திலும் அதையே தூக்கிகொண்டு திரிவது பெரியார் தொண்டர்களுக்கு அழகல்ல. பெரியாரின் கொள்கை பரப்பு என நீங்கள் செய்யும் செய்கைகள் மூலம் மக்களுக்கு அவரின் மீதான மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்புள்ளது. உண்மை தொண்டன் இதைச் செய்வானா? நிச்சயம் மாட்டன்.


சமூக இயக்கமாக நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது. அணு மின் நிலையங்கள் வேண்டாம் என போராடலாம். தமிழக நதிகளை இணைக்க கோரி போராடலாம். உள்ளூர் எரி, குளங்களை சுத்தம் செய்யலாம். இது போன்றவற்றை செய்யும்போது நீங்கள் பெரியார் தொண்டர்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை – தந்தை பெரியார்.
ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன.