Monday 7 May, 2012

ஜெயிக்க போவது யாரு?

வெண்பனிபிரதேசமாம் கனடாவின் லண்டன் நகரின் ஒரு அழகிய ஞாயிறு பிற்பகல் பொழுது. ஆறு இந்திய பிரஜைகள். உண்ட களைப்பையும் மீதமிருக்கும் பொழுதையும் கழிக்க உத்தேசித்தனர். அருகிலுள்ள பிலியர்ட்ஸ் மையத்துக்கு சென்றனர். பாக்கெட் பிலியர்ட்ஸ்  (பூல்) விளையாட முடிவுசெய்து மேசையும் பதிவு செய்தாயிற்று. கூட்டம் அதிகமில்லாததால் மேசை உடனடியாக வழங்கப்பட்டது. ஆறு பேரில் மூன்று பேருக்கு ஆட்டம் பரீச்சயமானது அதில் இருவர் கில்லாடிகள். இந்த இரு கில்லாடிகளும் இரு அணிகளுக்கு  தலைமை தாங்க தயராக இருந்தனர்.

அணிகள் ஆனா மற்றும் ஆவன்னா என பிரிக்கப்பட்டது. அணி 'ஆனா'வில் தலைவர், ஆட்டம் ஓரளவுக்கு தெரிந்த ஒருவர் மற்றும் முதல் முறை விளையாடும் ஒருவர். அணி 'ஆவன்னா'வில் தலைவர் மற்றும் இரண்டு புதுமுகங்கள். புதுமுகங்களுக்கு இந்த விளையாட்டு  கிட்ட தட்ட கேரம் போல, வில்லைகளுக்கு பதில் பந்துகள், வில்லை அடிப்பானுக்கு பதில் ஒரு பந்து, விரலை பயன்படுத்துவதற்கு பதில் ஒரு கழி என ஒரு மாதிரியாக அறிமுகம் செய்துவைக்கபட்டது. மொத்தமுள்ள பதினைந்து பந்துகள் முக்கோண வடிவில் படத்தில் உள்ளதை போல அடுக்கபட்டது. எழு பந்துகள் முழு நிறத்துடனும் ஏழு பந்துகள் பகுதி வெள்ளையாகவும் பகுதி மற்ற நிறத்துடனும் இருந்து. மேலும் ஒரு கருப்பு நிற பந்து இதனை கடைசியாகத்தான் குழியில் தள்ளவேண்டும். அடிக்க பயன்படும் வெள்ளை பந்து  மேசையின் மறுபுறத்தில் வைக்கப்பட்டது.

அணி ஆனாவின் தலைவர் ஆட்டத்தை ஆரம்பித்தார். ஒரே அடியில் அழகாக முக்கோண வடிவில் அடுக்கப்பட்ட பந்துகள் தாறுமாறாக கலைக்கப்பட்டு ஒரு முழுநிறபந்து மட்டும் ஈசானி மூலையில் உள்ள குழியில் விழுந்தது. இப்பொழுது முழுநிற பந்துகளை ஆனாவும், கலவைநிற பந்துகளை ஆவன்னாவும் குழிகளில் தள்ள வேண்டும். பந்து குழியில் விழுந்ததால் ஆனா தலைவர் மீண்டும் விளையாடினார். முழுநிற பந்தொன்று குழிக்கு சற்று முன்பே சக்தியிழந்து நின்றது. இது ஆவன்னா தலைவரின் முறை. கலவைநிற  பந்தொன்றை கிட்டத்தட்ட அறுபது டிகிரி கோணத்தில் லாவகமாக அடித்து குழியில் தள்ளி, அணி பேதமின்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். அடுத்த பந்தையும் சிரமமின்றி குழியிலிட்டார். மூன்றாவது முறை அடிபந்து குறிதவறி முழுநிற பந்தை தொட்டு விட்டதால். எதிரணிக்கு  இருமுறை ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது, அடுத்து ஆனாவில் உள்ள சுமாராக விளையாடும் நபரின் முறை. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. எதிரணி தவறிழைத்திருந்தமையால் இவருக்கு இன்னொரு வாய்ப்பு இருந்தது. இமுறை இவரது அணித்தலைவர் அருகில் வந்து, ஒரு பந்தை குறிப்பிட்டு அதனை மெதுவாக தட்டு உள்ளே விழுந்துவிடும் என்றார். அதைப்போலவே நடந்தது. தொடர்ந்து விளையாடினர்.

இப்பொழுது ஆவன்னா அணியிலுள்ள புதுமுகம் ஒருவரின் முறை, அவரின் அணித்தலைவர் அருகில் வந்து ஒரு பந்தின் ஒரு புள்ளியை குறிப்பிட்டு இங்கு மிதவேகத்தில் அடித்தால் எளிதில் அந்த குழியில் விழுந்துவிடும் என்றார். ஆனால் ஆடும் நபர் தலைவரை பார்த்து இந்த பந்தை குழியில் தள்ளுவது கடினம் என்றும் மற்றொரு பந்தை குறிப்பிட்டு இது எனக்கு எளிதாகபடுகிறது இதனை முயற்சிக்கிறேன் என்றார். தலைவர் தான் குறிப்பிட்ட பந்து தான் எளிமையானது, அதனையே அடிக்க முடியவில்லை என்றால் உன்னால் இங்கிருக்கும்  எந்தபந்தையும்  குழியில்  அடிக்க  முடியாது என்றார். புதுமுகம் தலைவர் சொன்னபடியே ஆடினார். பந்து குழியில் விழவில்லை, தலைவர் அவரை பார்த்து இன்னும் சற்று மெதுவாக அடித்திருக்க வேண்டும் என்றார். இதைப்போலவே ஆனா அணியின் தலைவரும் வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று அணி உறுப்பினர்களின் சுய முயற்சிகளை தடுத்தார். ஒருவழியாக ஆட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனா அணி வெற்றி பெற்றது. ஆவன்னா அணியின் தோல்விக்கு புதுமுகங்கள் முக்கிய காரணமாக கருதப்பட்டது.

நேரம் இருந்தமையால் இன்னும் இரண்டு ஆட்டம் ஆடலாம் என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஆனாவில் இருந்த சுமாராக விளையாடும் நபரை ஆவன்னா அணிக்கும், ஆவன்னாவில் இருந்த ஒரு புதுமுகத்தை ஆனாவுக்கும் மாற்றினர். இம்முறையும் நன்றாக விளையாட தெரிந்த தலைவர்களே ஆதிக்கம் செலுத்தினர். மீண்டும் அணி ஆனாவே வெற்றி பெற்றது. புதுமுகங்களில் ஒருவர் புதுமுகங்கள் ஒரு அணியாகவும் நன்கு விளையாட தெரிந்தவர்கள் ஒரு அணியாகவும் இருக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார்  ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது என்று அனைவரும் மறுத்தனர். ஆனால் அவர் இதனை முயற்சிக்கவேண்டும் என்று அனைவரையும் சம்மதிக்க வைத்தார். யோசனையை முன்வைத்தவர் நம் அணியில் தலைவர் யாரும் இல்லை அனைவரும் உறுப்பினர்கள்தான். யாரும் யோசனை சொல்லவோ பெறவோ போவதில்லை,  நாம் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்து விளையாட வேண்டாம், தங்களால் முடிந்ததை செய்வோம் என்றார். மற்ற இரு புதுமுகங்களும் இதற்கு சம்மதித்தனர்.

அன்றைய கடைசி ஆட்டம் ஆரம்பமானது. தலைவர்கள் அணியில் இரண்டுபேருமே தலைவர்களாக செயல்பட்டனர். புதுமுகங்களால் பெரியதாக எதையும் செய்யமுடியாது என்றும் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கபோவதில்லை என்றும் திடமாக நம்பினர். புதுமுகங்கள் அணி மெதுவாக தங்களின் பந்துகளை குறைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தலைவர்கள் அணி நான்கு பந்துகளையும், புதுமுகங்கள் இரண்டு பந்துகளையும் குழியில் தள்ளியிருந்தனர்.  அப்பொழுது  புதுமுகம் ஒருவர் ஆடினார். அவர் தொடர்ந்து மூன்று பந்துகளை குழிக்கு அனுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  தலைவர்கள் அணி வெற்றிபெற்றாக வேண்டும் என்ற அழுததில் ஆடினர். புதுமுகங்கள் அனைவருமே நிதானமாக ஆடி அசத்தினர். இரு அணிகளும் தங்களது அனைத்து பந்துகளையும் குழிக்கு அனுப்பிவிட்டனர்.  கருப்பு பந்து மட்டுமே எஞ்சியிருந்தது  எந்த அணி இதனை அடிக்கிறதோ அது வெற்றிபெறும் என்ற நிலையை அடைந்தது. கடைசியில் தலைவர்கள் அணி வென்றது.

ஆனால் புதுமுகங்கள் அணியின் செயல்பாடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் சிந்திக்கவும் வைத்தது.  அழுத்தப்பட்ட சூழ்நிலைகளில் பெரும்பாலும் முழுமையான திறன் வெளிபடுவதில்லை.  தலைவர்கள் அல்லது மூத்தவர்கள் இளையவர்களுக்கு இதை இப்படி செய், அதை அப்படி செய் என்று அழுத்தத்தை கொடுப்பதற்கு பதிலாக பொறுப்புகளை கொடுக்கலாம். செயல்பாடு நிச்சயமாக வேறுமாதிரியாக இருக்கும். மேலே சொல்லப்பட்டது ஏதோ ஒரு தத்துவத்தை விளக்க தயாரிக்கப்பட்ட கதையல்ல என்னை பாதித்த என்வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வு. தந்தை-மகன், ஆசிரியன் - மாணவன். தலைவன் - தொண்டன். மேலாளர் - தொழிலாளி. இப்படி எல்லா உறவுகளிலும், அழுத்தம் ஒன்றே நல்ல முடிவை தரும் என்ற அவ நம்பிக்கை இருக்கிறது. கேட்டால் உன்னுடைய நல்லதுக்குதான் என்று சொல்வது. குறிப்பாக ஆசிரியன் - மாணவன் உறவில் பயன் படுத்தப்படும் அழுத்ததை நிச்சயமாக களைய வேண்டும், இதுதான் வருங்கால சமுதாயத்தின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்க கூடியது.

படித்ததில் பிடித்த குட்டிகதை
*********************************************************************************************************

மக்கள் எவ்வளவு ஏழைகளாக வாழ்கிறார்கள்  என்பதை சிறுவனான தன்  மகனுக்கு உணர்த நினைத்தார் ஒரு செல்வந்தர். ஒரு நாள் தன் மகனை கிராம பகுதிகளுக்கு அழைத்து சென்றார். பயணம் முடிந்து திரும்பும் வழியில். மகனை பார்த்து பயணம் எப்படி இருந்தது? என்றார். "நன்றாக இருந்தது" என்றான். "மக்கள் எவ்வளவு ஏழைகளாக இருக்கிறார்கள் என்று பார்த்தாயா?" என கேட்டார். "ஓ பார்த்தேனே" என்றான். "பயணத்திலிருந்து என்ன தெரிந்து கொண்டாய்?" என்று வினவினார்.

"நம்ம கிட்ட ஒரே ஒரு நாய்தான் இருக்கு, அவங்ககிட்ட நிறைய இருக்கு, நாம பசுமைக்காக கார்டன் ல கொஞ்சமா புற்கள் வளர்கிறோம். அவங்க வயல்வெளிகள் மிகப் பெரிய பரப்பில் பசுமை படர்ந்து கிடக்கிறது. நம்ம சாப்பாடுக்கு கடையில வாங்குறோம், அவங்க தேவையானத உற்பத்தி செஞ்சிகிறாங்க, நம்மளோட பாதுகாப்புக்காக வீட்டை சுற்றி சுவர் எழுப்பி இருக்கோம்,  அவங்கள சுத்தி நல்ல நண்பர்கள் இருக்காங்க" என்றான்.

வாயடைத்து நின்ற தந்தையை நோக்கி, "நம்ம எவ்வளவு ஏழையாக இருக்கோம் னு காட்டியதற்கு நன்றிப்பா!" என்றான்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை ! ரொம்ப நாள் கழித்து பதிவு ! தொடருங்கள் நண்பரே !

குடிமகன் said...

வணக்கம்! திண்டுக்கல் நண்பரே! - வருகைக்கு நன்றி! வேலைபளு கொஞ்சம் அதிகம்.. அதான் பதிவெழுத முடியல..

kanna said...

arumai

குடிமகன் said...

ஆஹா!! நன்றி டா கண்ணா!!

Unknown said...

so nice to see ur post after a long g a p

குடிமகன் said...

//
Rajeshkanna N said...
so nice to see ur post after a long g a p //

அப்ப வேல பாக்கம பெஞ்ச்லையே இருக்க சொல்ற... நல்லா இருக்கு டா...

Jey said...

Gudi magane... Perung gudimagane...

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!