காட்டுபூச்சி தன் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனது தங்கை சாந்தியும் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அது ஒரு மாலைநேரம், பள்ளியில் மணி அடித்தவுடன் வழக்கம்போல மாணவர்கள் ஹே!! என சத்தமிட்டுகொண்டு பள்ளியை விட்டு ஓடினர். காட்டுபூச்சியின் வீடு பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, குடும்பத் தொழில் விவசாயம் என்பதால் தங்களுடைய நிலத்திலே வீடுகட்டி வாழ்ந்துவந்தது அவனது குடும்பம். காட்டுபூச்சி தன் தங்கைக்காக பள்ளி வாயிலில் காத்திருந்தான். தங்கையை பள்ளிக்கு அழைத்து போவது, மீண்டும் வீட்டிற்கு அழைத்து போவது அவனது கடமைகளுள் ஒன்று. சாந்தி வந்தாள், இருவரும் வீட்டைநோக்கி நடையைகட்டினர்.
“சாந்தி இன்னைக்கி பனம்பூ பொருக்கனும்” என்றான். “எதுக்கு அண்ணா?” வினவினாள் சாந்தி. “காத்தி செய்யனும்ல” என்றான். “அதுக்கு இன்னும் பத்துநாள் இருக்கே” என்றாள். “ஞாபகம் இல்லையா?, போன தடவை நம்ம காத்தி செய்யும்போது மழை பெஞ்சி கெடுத்தது” என்றான். காத்தி செய்ய தேவையான இடுபொருட்களை சேகரிக்க தொடங்கினர். இருவரும் வழியில் இருந்த பனைமரங்களின் கீழே கிடக்கும் காய்ந்த பனம்பூக்களை, பொருக்கி புத்தக பைக்குள் போட்டுக்கொண்டனர். வீட்டிற்கு வந்தவுடன் பனம்பூக்களை சிறிய துண்டுகளாக உடைத்து உர சாக்கு ஒன்றில் பரப்பி, வீட்டின் வாசலில் இருந்த களத்தில் நன்கு வெயில் படும் இடத்தில் வைத்தான் காட்டுபூச்சி. காற்றில் பறக்காமல் இருக்க சாக்கின் நான்கு மூலைகளிலும் சிறிய கற்களை வைத்தான்.
காத்தி தயாரிப்பில் கரி முக்கிய மூலப்பொருள் ஆகையால் அம்மாவிடம் குறைந்தது மூன்று நாளைய அடுப்புக்கரியாவது வேண்டும் என கண்டிப்பாக சொல்லிவிட்டான். அம்மா சமைத்து முடித்தவுடன் அடுப்பில் உள்ள கங்கில் தண்ணீர் தெளித்து கரியாக்கவேண்டும். அம்மாவுக்கு அது ஒரு பெரிய வேலையில்லை ஆனால் அவளுக்கு தினமும் சாமான்களை விளக்க சாம்பல் தேவைப்படும். எனவே இரவு சமையலில் சாம்பலையும், காலை சமையலில் கரியையும் உற்பத்தி செய்தாள்.
இதற்கிடையில் காத்தி தயாரிப்பு முறை, என்னென்ன சேர்த்தால் பொறி அதிகமாக பறக்கும் போன்றவைதான் பள்ளி மாணவர்களிடையே முக்கிய விவாத பொருளாக இருந்தது. அதில் சிலர் தங்களை காத்தி தயாரிப்பில் கைதேர்ந்தவர்களா காட்டிகொள்வர். இன்னும் சிலர் தங்களுடைய காத்தி தயாரிப்பு சூத்திரத்தை சிதம்பர ரகசியம்போல் பாதுகாத்தனர். இப்படியாக நாட்கள் சென்றன. காத்தி தயாரிப்பு குறித்து காட்டுபூச்சி தன் சித்தப்பாவிடம் ஆலோசனை கேட்டதில், அவர் பொறிப்பூண்டு( இட்லி அளவில் குத்தாக வளரும் புல் உயரமாக வளராது) என்ற ஒரு வகை புல்லை சேர்க்க சொல்லியிருந்தார். அந்த பொறிப்பூண்டையும் சேகரித்து வீட்டில் வைத்திருந்தான். முன்னதாக நெல் உமி, வரகு உமி ஆகியவற்றையும் சேகரித்து வைத்திருந்தான். அனைத்து மூலப்பொருட்களும் கிடைத்துவிட்டன. இவை அனைத்தையும் வெய்யிலில் நன்கு உலர்த்தி வைக்குமாறு அம்மாவை கேட்டுகொண்டான்.
மேலும் சில நாட்கள் சென்றன. அன்று ஞாயிற்றுக்கிழமை இன்னும் இரண்டு நாட்களில் கார்த்திகை தீபம் எனவே காத்தி தயாரிப்பை இன்றே செய்வதென்ற முடிவுக்கு வந்தான் காட்டுபூச்சி. சாந்தியிடம் சிறிய துண்டுகளாக இருக்கும் பனம்பூவை மேலும் சிறியதாக்க சொன்னான், பொறிப்பூண்டை சிறியதாக்கும் வேலையை அவன் எடுத்துகொண்டான். இதனை முடித்தவுடன். கரி, உப்பு கொஞ்சமாக, பொறிப்பூண்டு துண்டுகள், பனம்பூ துண்டுகள் ஆகியவற்றை குந்தாணியில் (உரல் போன்று கல்லால் ஆனது, பொதுவாக உரலை மாவாட்டவும், குந்தணியை நெல் குத்தவும் பயன்படுத்துவர்) போட்டு உலக்கையை வைத்து இடித்தான். கலவை நன்கு இடிந்தபின் அதனுடன் நெல் உமி, வரகு உமி ஆகியவற்றை சேர்த்தான். சென்ற பொங்கலுக்கு அம்மாவுக்கு தமிழக அரசின் மூலம் கிடைத்த கைத்தறி சேலை கிழிந்துவிட்டதால், அம்மா இப்பொழுது அதனை பயன்படுத்துவதில்லை. காத்தி பொட்டலம் கட்டுவதற்கு உகந்தது இந்தமாதிரியான நூல் துணிதான். பொட்டலம் கட்ட அம்மாவிடம் அந்த சேலையை வாங்கிகொண்டான்.
பொட்டலம் கட்ட அப்பாவின் உதவியை நாடினான் காட்டுபூச்சி. அப்பாசேலையை செவ்வக துண்டுகளாகவும், கயிறு போன்றும் கிழித்து கொண்டார். இடிக்கப்பட்ட கலவையில் கொஞ்சம் எடுத்து ஒரு செவ்வக துண்டில் வைத்து சுருட்டினார். படியை(அரிசி அளக்க பயன்படுவது) விட சற்று சிறிய அளவிலான உருளையாகினார். கயிறுபோன்று கிழித்த துணியை கொண்டு உருளை அவிழாத வண்ணம் கட்டினார். இதேபோல் காட்டுபூச்சி இடித்த கலவையைக் கொண்டு ஐந்து உருளைகளை உருவாக்கினார் அப்பா. காத்தி சுத்த பயமாக இருந்தாலும் தனக்கென்று இரு பொட்டலங்களை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள் சாந்தி. மீதமிருப்பதை காட்டுபூச்சி பதிரப்படுத்தி கொண்டான்.
மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குடும்பம், கார்த்திகை ஆரம்பித்தவுடன் அகல் விளக்குகள் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள். தீபத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக வீடுவீடாக சென்று அகல்களை விற்பனை செய்ய தொடங்கிவிடுவார்கள். ஊரில் விற்பனை முடித்து, காட்டுகொட்டாய் பகுதிகளுக்கு தீபம் அன்று காலையில் தான் வருவார்கள். அப்படி தீபம் அன்று காட்டுபூச்சி வீட்டிற்கும் வந்தார் அகல் விற்பவர். காட்டுபூச்சியின் பாட்டி மூன்று படி அரிசி கொடுத்து 25 அகல்கள் வாங்கினார். அகல்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து பின்னர் எடுத்து பயன்படுத்துவது வழக்கம். ஒரு அண்டாவில் அகல்களை போட்டு தண்ணீரை ஊற்றினார் பாட்டி. அகல்கள் சலசல என்ற சத்தத்துடன் தண்ணீரை குடித்து. அண்டாவிலிருந்து காற்று குமிழ்கள் சத்தத்துடன் வெளியேறுவதை ஆச்சர்யமாக பார்த்துகொண்டிருந்தாள்.
மாலை ஐந்து மணியானதும் பாட்டி சாந்தியிடம் அண்டாவிலிருந்த அகல்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார். அகல் எடுக்கச்சென்ற சாந்திக்கு ஆச்சரியம் அண்டாவில் பாதிக்கு கீழ் தண்ணீர் குறைந்திருந்தது. அகல்கள் அவ்வளவு தாகத்தில் இருந்திருக்கின்றன. சாந்தி அகல்களை எடுத்து கிழே வரிசையாக வைத்தாள். அதற்குள் பாட்டி பஞ்சை திரித்து அகலுக்கான திரி செய்ய தொடங்கி இருந்தார். சாந்தி பாட்டி தயாரித்த திரியை ஒவ்வொன்றாக அகல்களுக்கு அணிவித்தாள். ஆதவன் மறைய காத்திருந்தனர்.
காட்டுபூச்சியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல், அப்பா காத்தி கட்ட தயாரானார். நொச்சி செடியிலிருந்து வெட்டிய நொச்சி குச்சிகளில் (வளையும் தன்மை கொண்டது) முதலில் மூன்றை எடுத்தார் ஒவ்வொன்றும் சுமார் அரை மீட்டர் நீளம் கொண்டது, காட்டுபூச்சி தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த உருளை பொட்டலத்தோடு நின்றிருந்தான். அந்த மூன்று குச்சிகளின் ஒருமுனையில் சனலை கொண்டு இருக கட்டினார். அப்பா பொட்டலத்தை வாங்கி, குச்சிகளுக்கு இடையில் வைத்தார். மறுமுனையையும் சனலைக்கொண்டு மூன்று குச்சிகளையும் சேர்த்துகட்டினார். இப்பொழுது ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கயிறை கட்டினார்.ஒருவழியாக காத்தி தயாரிப்பு நிறைவடைந்தது. இதேபோல் சாந்திக்கும் ஒரு காத்தியை செய்துகொடுத்தார். காட்டுபூச்சி காத்தியின் மூன்று குச்சிகளுக்கு இடையில் உருளை பொட்டலத்தில் நெருப்பு துண்டுகளை வைத்தான், அப்பா அதனை அசைக்காமல் அப்படியே எடுத்துசென்று அருகிலிருந்த வேப்பமர கிளையில் கட்டி தொங்க விட்டார். இது கனிவதற்க்கு பத்து நிமிடங்களாவது பிடிக்கும்.இதற்கிடையில் வீட்டில், குப்பைமேட்டில், கிணற்று படியில் என எங்கும் அகல்கள் எற்றபட்டிருந்தன. அந்த முன்னிரவு நேரத்தில் ஜெகஜோதியாக இருந்தது வீடு.
காத்தி நன்கு கனிந்தவுடன் மரத்திலிருந்து அவிழ்த்து காட்டுபூச்சியிடம் கொடுத்தார் அப்பா. ஒருமுனையிலிருந்த கயிற்றை இருக பற்றிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தான். பொறி பிரமாதமாக வந்தது. காட்டுபூச்சி காத்தி சுற்றுவதை சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. கம்பிமத்தாப்பு யாருடைய உதவியுமின்றி அந்தரத்தில் வட்டமடிப்பது போல இருந்தது. கண்கொள்ளாக்காட்சி. திடீரென வானதில் வெடி சத்தம் கேட்டது. வானவெடி சத்தம் ‘இன்னும் சற்று நேரத்தில் சொக்கப்பானை கொளுத்தப்படும்’ என்ற செய்தியை தாங்கி வந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாரானார்கள். தனது காத்தியை நண்பர்களுக்கு காட்டவேண்டும் என்ற ஆவலுடன் சொக்கப்பானை கொளுத்தும் கோவிலை நோக்கி குடும்பத்தினருடன் வேக நடையிட்டான் காட்டுபூச்சி. சாந்தி தன் காத்தியை வீட்டிலே வைத்துவிட்டு சென்றாள். சொக்கப்பானை என்பது நடுவில் பச்சை வாழைமரம் நட்டு சுற்றிலும் துவரை மெளார் (மகசூல் முடிந்து வெட்டப்பட்ட காய்ந்த செடி) நட்டு அதை சற்றிலும் காய்ந்த தென்னங்கீற்று நட்டு. பின்னர் அதை கொளுத்துவர் சுற்றிலும் உள்ள மக்கள் தீச்சுவாலையில் உப்பை போடுவார்கள். சொக்கப்பானை படபட வென்று மிகுந்த வெடி சத்தத்துடன் எரியும்.
காட்டுபூச்சி தன் நண்பர்களிடத்தில் சுற்றிக்காட்டி பெருமைகொண்டான். சொக்கப்பானை எரிந்து முடிந்தவுடன் குடும்பத்துடன் வீடுதிரும்பினான் காட்டுபூச்சி. அதற்குள் உருளை பொட்டலம் காலியாகி இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் அடுத்த பொட்டலத்தை மூன்று குச்சிகளுக்கிடையில் நுழைத்தான்.
நான் காத்தி எனச்சொல்வதை, உங்கள் பகுதியில் எவ்வாறு அழைப்பார்கள்? என்று பின்னூட்டத்தில் மறக்காம சொல்லிட்டுபோங்க
காத்தி சுத்துவதை போன்ற படம் வலையில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன்.
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
22 comments:
இந்த பழக்கம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் சாலைகளில் தான் சொக்கப் பனை சுற்றுவதை பார்த்திருக்கிறேன்... திருவண்ணாமலை நகரில் வசிக்கும் மக்களுக்கே சொக்கப் பனை என்றால் என்ன என்று தெரியாது, என்னுடைய ஒரு சிறு கதையில் இந்த சொற்பதத்தை உபயோகித்து திருவண்ணாமலையில் உள்ள தமிழ் ஆசிரியராக வேலை செய்யும் என் தங்கை படித்து பார்த்து விட்டு, சொக்கப் பனைக்கு அர்த்தம் கேட்டப் போது தான் இந்த உண்மை எனக்கு தெரியும்..
இரவு நேரத்தில் கார்த்திகை தீப சமயங்களில் வந்தவாசி காஞ்சிபுர சாலைகளில் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சிறுவர்கள் சொக்கப் பனை சுற்றுவதை பார்ப்பதற்காகவே
சிறுவயது ஞாபகம் கிளறி விட்டீர்கள்!
சொக்கபனை கொழுத்துறது.... ம்... மலரும் நினைவுகளில் மூழ்க வைத்துவிட்டீர்கள்...
----------------------------------------
உங்கள் பதிவுகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய www.hotlinksin.com இணையதளத்தில் பதிவுகளை பகிர்ந்திடுங்கள்
------------------------------------
@சூர்யஜீவா – ஆற்காடு மாவட்டங்களுக்குள்ளாகவே இவ்வளவு நுண்ணிய வேறுபாடுகளா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்தியாவை மொத்தமாக பார்த்தல் எவ்வளவு இருக்கும்? உண்மையிலே இந்தியாவின் பன்முகத்தன்மை வியப்புக்குரிய ஒன்றே!
@சீனிவாசன்.கு – தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@tamildigitalcinema - தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பாஸ் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...... பழைய நினைவுகள் மனசில் அலைமோத உங்கள் பதிவை படித்தேன்.....................
எனக்கு இப்போதும் நினைவு இருக்கு.... சின்ன வயதில் வன்னியில் இருந்த போது கார்த்திகை தீபம் ஏற்றியது........ வீடு கிணறு காணி என்று எல்லா இடத்திலும் வைப்போம்....
வாழை மரத்தை வெட்டி விளக்கு வைப்பது இப்பவும் மனசுக்குள் நிழலாடுது :)
அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
துஷ்யந்தன் said...
//எனக்கு இப்போதும் நினைவு இருக்கு.... சின்ன வயதில் வன்னியில் இருந்த போது கார்த்திகை தீபம் ஏற்றியது........ வீடு கிணறு காணி என்று எல்லா இடத்திலும் வைப்போம்....
வாழை மரத்தை வெட்டி விளக்கு வைப்பது இப்பவும் மனசுக்குள் நிழலாடுது :) //
வணக்கம் பாஸ்..
அடுத்த தலைமுறை இவற்றையெல்லாம் அனுபவிப்பார்களா என்பது சந்தேகமே
@ திண்டுக்கல் தனபாலன் - கருத்துக்கு நன்றி நண்பரே!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா நண்பனே
மலரும் நினைவுகள் மழைக் காலத்துக் காளான்
மனதுக்குள் பூத்தன சகோ!
நன்றி!
த ம ஓ 2
புலவர் சா இராமாநுசம்
//சி.பி.செந்தில்குமார் said...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா நண்பனே //
தேங்க்ஸ் சிபி அண்ணே!!
//புலவர் சா இராமாநுசம் said...
மலரும் நினைவுகள் மழைக் காலத்துக் காளான்
மனதுக்குள் பூத்தன சகோ!
நன்றி!
த ம ஓ 2
புலவர் சா இராமாநுசம் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
சிறு வயதில், அரக்கோணத்தில் இருந்தபோது, சிறுவர்களும் பெரியவர்களும் ஒரு நீண்ட கயிற்றின் முனையில் எதையோ கட்டி ,தீயிட்டு சுழற்றுவார்கள். கம்பி மத்தாப்புப் பொறிகள் போல் திகு திகு என்று சப்தத்துடன் எரியும். என்ன ஏது எப்படிச் செய்கிறார்கள் என்று ஏதும் தெரியாமல் வாய் பிளந்து வேடிக்கை பார்த்தது நினைவுக்கு வருகிறது. சில பாரம்பரியமாக வந்த செயல்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.நினைவுகளைக் கிளரும் பதிவு. வாழ்த்துக்கள்.
நம்மூரிலும் (யாழ்ப்பாணத்தில் உள்ள குக்கிராமம்) விளக்கீடு கொண்டாடுவோம். நம்மூரில் தீபாவளிக்கு விளக்கு வைப்பதில்லை.
மலரும் நினைவுகள்...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
www.rishvan.com
@G.M Balasubramaniam -
//சிறு வயதில், அரக்கோணத்தில் இருந்தபோது, சிறுவர்களும் பெரியவர்களும் ஒரு நீண்ட கயிற்றின் முனையில் எதையோ கட்டி ,தீயிட்டு சுழற்றுவார்கள். கம்பி மத்தாப்புப் பொறிகள் போல் திகு திகு என்று சப்தத்துடன் எரியும். என்ன ஏது எப்படிச் செய்கிறார்கள் என்று ஏதும் தெரியாமல் வாய் பிளந்து வேடிக்கை பார்த்தது நினைவுக்கு வருகிறது. சில பாரம்பரியமாக வந்த செயல்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.நினைவுகளைக் கிளரும் பதிவு. வாழ்த்துக்கள். //
ஆம் ஐயா.. எங்கள் பகுதியில் கூட இன்று இந்த வழக்கம் ஒழிந்து வருகிறது..
//@எஸ் சக்திவேல் said...
நம்மூரிலும் (யாழ்ப்பாணத்தில் உள்ள குக்கிராமம்) விளக்கீடு கொண்டாடுவோம். நம்மூரில் தீபாவளிக்கு விளக்கு வைப்பதில்லை. //
ஆம் நண்பரே! இங்கேயும் அதே தான்..
Rishvan said...
மலரும் நினைவுகள்...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
www.rishvan.com
வருகைக்கு நன்றி!
சிறுவயதில் சொக்கப்பனை கொழுத்திய ஞாபகம்
மனதில் நிழலாடியது.. தங்களின் பதிவைக் கண்டு.
என் தளம் தேடி வந்து கருத்து கொடுத்தமைக்கு
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
இன்று முதல் தங்களின் தளம் தொடர்கிறேன்.
@மகேந்திரன்- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
Post a Comment
மனசுல பட்டத சொல்லிடுங்க!