தமிழகத்தில் இயங்கும் கட்சிகளை பற்றி நினைக்கும்போது எல்லோரையும் போலவே எனக்கும் விளங்காத (விடைதெரியாத) அதே கேள்விதான். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது? காங்கிரஸா, தேமுதிக வா, மதிமுக வா, பாமக வா? இல்லை இவற்றில் இல்லாத ஏதோ ஒரு கட்சியா? இதற்கான விடை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிச்சயம் மாறுபடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்க்கு உதாரணம். சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிக சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது (தமிழக பத்திரிகைகள் இப்படிதான் கூறின). இதற்க்கு கரணம் என்ன? விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதா? இல்லை இந்த கட்சிக்கு செல்வாக்கே இவ்வளவுதானா? இது நம் பிரச்சனையில்லை, எனவே தோல்விக்கான காரணத்தை அந்த கட்சி தன் சொந்த செலவில் கண்டுபிடித்து கொள்ளட்டும். திமுக சார்பு பத்திரிகைகள் தனது கட்சியின் தோல்வி குறித்து வருத்தபடாமல், தேமுதிக, காங்கரஸ், பாமக கட்சிகளின் தோல்வியில் இன்பம் அடைகின்றன.
ஒரு தனிப்பட்ட கட்சியின் வாக்கு வங்கி மிகவும் ரகசியமான ஒன்றாகவே இவ்வளவு நாட்களாக இருந்துவந்தது. இதற்கான காரணம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். இந்த ரகசியத்தை ஓரளவு கசியவைத்த பெருமை உள்ளாட்சி தேர்தல் 2011 -ஐச்சேரும். இதேபோல் சட்டமன்ற / பாராளுமன்ற பொதுத்தேர்தல் களையும் இந்த கட்சிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும். இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது என்ற விவரங்களை அறிந்துகொள்ள இணையத்தில் உலவும் போது கீழேயுள்ள புள்ளி விவரங்களை தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காண முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த பல தகவல்களை ஆணையம் அழகாக நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட காண முடிந்தது. ஆனால் உள்ளாட்சியிலேயே கடை மட்ட பதவியான கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அளவில் தகவல்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்குள் ஆணையம் அந்த வசதியையும் கொண்டுவந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் சுட்டி
![]() |
நன்றி : தமிழக தேர்தல் ஆணையம் |
1. 49.15% இடங்களில் அஇஅதிமுக வெற்றிபெற்றுள்ளது. (வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது சென்னை மாநகராட்சி மேயரும், சின்னசேலம் பேரூராட்சியின் வார்டு உறுப்பினரும் சமப்படுத்தப்பட்டுள்ளனர்).
2. 20.20% இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.
3. 16.52% இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.
4. 4.26% இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.
5. 3.69% இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
6. மீதமுள்ள 6.57% இடங்களில் மற்ற 25+ கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது.
7. தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இயங்கிகொண்டிருகின்றன.
8. இதில் மற்றவை(others) என்று விசிக வுக்கு மேலே உள்ளதை கவனிக்கவும். தேர்தல் ஆணையமே குழம்பிப்போய் இந்த கட்சிகளின் பெயரை வெளியிட முடியாமல் மற்றவை என்ற ஒரே வகையில் வெளியிட்டுள்ளது.
9. இருபதாயிரத்து சொச்ச இடங்களில் ஒன்றைக்கூட வெல்லமுடியாமல் 12 கட்சிகள் உள்ளன. இவையெல்லாம் வட நாட்டு கட்சிகளா? வடநாட்டு கட்சிகளாக இருந்தால் எதற்கு தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும்? ஒன்றும் புரியவில்லை.
10. தலைப்பில் உள்ள கேள்விக்கு வருவோம். மூன்றாவது பெரிய கட்சி, அப்படியொன்றே இல்லை என்றுதான் இந்த புள்ளி விவரம் சொல்கிறது.
11. அஇஅதிமுக மற்றும் திமுக தவிர மற்ற அணைத்து கட்சிகள் வென்ற மொத்த இடங்கள் 2840 ஆனால் சுயேட்சைகள் வென்ற இடங்கள் 3326.
12. ஆக மூன்றாவது சக்தி அல்லது மாற்று சக்தி எனப்படுவது சுயேட்சைகள். எனவே மாற்றம் விரும்பும் பதிவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக களம் இறங்குங்கள். குடிமகனின் ஆதரவு என்றும் உங்களுக்கே.
மனதில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்!! அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!