Wednesday, 20 April, 2011

வேண்டும் ஓர் வேளாண் புரட்சி…..!!!!!!!

அன்று மாலை சமையல் செய்யலாம் என்று முடிவு செய்து, கடைக்கு காய்கறி வாங்க சென்றேன். ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு என்று கேட்ட போது, இன்றைய விலை 130 ரூபாய் என்று பதில் வர அதிர்ந்து போனேன். 1 /2 கிலோ வாங்க சென்ற நான் 1/4 கிலோவுடன் திரும்பினேன். முன்தாக வெங்காயத்தின் விலை ரூ.90 ஐ தொட்டது என்ற செய்தியை இணையத்தில் படித்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றிவே கைபேசியில் எனது தந்தையை அழைத்து, நம்ம ஊர்ல வெங்காயம் எப்படி போகுது என்று கேட்டேன். இப்போ நம்ம நிலத்துல வெங்காயம் இருந்திருந்தா நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்று சொல்லிவிட்டு, பக்கத்துக்காட்ல  ஒரு குவிண்டால் (100  கிலோ) 3500 ரூபாய்க்கு வியாபாரியே நேரில் வந்து வாங்கிச்சென்றதாக கூறினார். வெங்காயம் சொகுசு வண்டியில் பயணித்து வந்ததோ? என்ற சந்தேகம் தான் எழுந்தது. 65  கிலோ எடை கொண்ட நான், எனது சொந்த கிராமமான வி.அலம்பலத்திலிருந்து  (விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம்), சென்னையில் உள்ள சோழிங்கநல்லூருக்கு அரசு பேருந்துகளில் வந்து சேர்வதற்கு 85  ரூபாய் தான் செலவாகிறது . ஆனால் ஒரு கிலோ வெங்காயம் எனது கிராமத்திலிருந்து சென்னைக்கு வருவதற்கு  95  ரூபாய் செலவழித்திருக்கிறது என்று கணக்கிடும்போது, நான் மிகவும் வேதனையடைந்தேன்.
கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் சார்பாக எனது முதல் கோரிக்கை இதுதான், இடைத்தரகை முற்றிலுமாக (குறைந்தபட்சம் வேளாண் பொருட்களின் கொள்முதல்-விற்பனையிலாவது)  ஒழிக்கவேண்டும். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளை தொடங்குவதில் எனக்கு  உடன்பாடில்லை. ஏனெனில் தொழிற்சாலையுடன் அழையா விருந்தாளிகளாக வருவ சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தான். நமது பாரம்பரிய தொழிலை விடுத்து ஏன் புதியதை தொடங்கவேண்டும்? இடைத்தரகை அகற்றி புதிய  வேலை வாய்ப்புகளை உருவாக்க, ஒன்றியம் தோறும் அல்லது குறைந்தபட்சம் தாலுக்கா அளவிலாவது, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக்கூடம் அமைக்கப்பட வேண்டும். இது விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஒரு தளமாக செயல்படவேண்டும். இதன்மூலம் வேலூரில் உள்ள பருத்தி விவசாயி, தனது பருத்தியை கோவை வியாபாரியிடமும், கள்ளக்குறிச்சியில் உள்ள மஞ்சள் விவசாயி தனது மஞ்சளை சென்னை வியாபாரியிடமும் நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
எனது பகுதி விவசாயிகளிடம் உரையாடியதிலிருந்து மற்றொரு பிரச்சனையான “ஆட்கள் பற்றாக்குறை” யின் வீரியத்தை நான் அறிந்துகொள்ள முடிந்தது, இதற்கு முக்கிய காரணங்கள். 1)மத்திய அரசின் 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்.                             2)வேலை உடல் உழைப்பைச் சார்ந்ததாக உள்ளது.                                                         
தற்பொழுது விவசாயம் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், வேறு வேலை அல்லது தொழில் செய்ய வாய்ப்பு இல்லாதவர்களாக தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாய்ப்பு கிட்டுமாயின் நிச்சயமாக வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். இது மிகவும் வேதனைக்குறியதாகும். மத்திய அரசின் 100 நாள் திட்டத்தை மாநில அரசும் உள்ளாச்சி அமைப்புகளும் முறையாக பயன்படுத்தியிருந்தால், ‘புதிய தலைமுறை’ சுட்டிக்காட்டிய வெள்ளச்சேதத்தை முற்றிலுமாக தடுத்திருக்கலாம். எனது கிராமத்தில் நடந்ததை பதிவு செய்ய விரும்புகிறேன். 100 நாள் வேலை திட்ட பயனாளர்களான என் ஊர் பெண்களிடம் கேட்டேன், “அப்படி என்ன வேலை ஏரியில் செய்றிங்க?”, அவர்கள் சொன்னது இதுதான், “மண்ணை ஒர் இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தில் கொட்டுவோம்”. “எதற்காக செய்றிங்க?” என்று கேட்டதற்கு “ஏதாவது செய்ய வேண்டுமே அதான்!” என்றனர். உண்மையில் அவர்கள் தினமும் ஏரிக்கு சென்று ஒவ்வொருவரும் 10 கூடை அளவிலான மண்னை ஓரிடத்திலிருந்து வெட்டி மற்றொரு இடத்தில் கொட்டிவிட்டு, மீதமுள்ள பொழுதை அங்குள்ள மரங்களின் நிழலில் கழித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 3 மாதங்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததில் ஏரிக்கரை உடைப்பு ஏற்பட்டது. இரு கிராம பொதுமக்கள் சேர்ந்து உடைப்பை சரிசெய்தனர். முழுமையான உடைப்பு எற்ப்பட்டிருந்தால், 500 ஏக்கர் நெற் பயிர்களும், ஒரு கிராமம் முழுமையாகவும் மூழ்கியிருக்கும் அபாயம் உள்ளது. 250 பேர் 100 நாட்கள் ஏரியை சீரமைத்து இருக்கிறார்கள், ஆனால் கரை உடைப்பை தடுக்க முடியவில்லை. இது மதிரியான திட்டங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்வது உள்ளாட்சி அமைப்புகளின் கையில்தான் உள்ளது.
எனது இரண்டாவது கோரிக்கை, விவசாய மாவட்டந்தோறும் ஒரு வேளாண் ஆய்வு மையத்தை ஏற்படுத்தவேண்டும், இம்மையத்தின் பணிகள் கீழ்கண்டவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
1)அந்தபகுதி விவசாயத்துக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்க்கொள்வது.
        2)விவசாயத்திற்கு இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்வது.
        3)இந்த அமைப்பின் ஒரு அங்கமாக வேளாண் ஆலோசனை மையத்தினை
 அனைத்து   
         ஒன்றியங்களிலும் அமைக்க வேண்டும். இந்த துணை அமைப்பு இதன் தாய் அமைப்பின்   
         ஆய்வு
முடிவுகளை அப்பகுதி விவசாயிகளுக்கு தெரிவிப்பதுடன், அவற்றை பயன்பாட்டிற்கு
         கொண்டுவர முனைதல் வேண்டும். மேலும் இவ்வமைப்பு அனைத்து நிலைகளிலும்
         விவசாயிகளுக்கு ஓர் ஆலோசனை மையமாக திகழ வேண்டும்.
இதன்மூலம் வேளாண் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களை இத்துறைக்கு ஈர்க்கமுடியும். இன்றைய விவசாயம் உடல் உழைப்பு சார்ந்ததாக இருப்பதனால்தான் இத்தொழில் நலிவடைந்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப தொழில்நுட்பத்தையும், இயந்திரங்களையும் பயண்பாட்டிற்குக் கொண்டுவந்தால், இளைஞர்களை வேளாண் தொழிலுக்கு கவர்ந்திழுக்க முடியும், பிறகு வேளாண் புரட்சி ஏற்படுவதை யாராலும் தடுக்க இயலாது.

2 comments:

SelvaS said...

Good Start... Keep it up....
they way you told this matter is nice.. and every one will thing !!!!!

siva2009 said...

உன் கண்ணில் பிறர் அழதால்!!!!
கண்ணீரும் ஆனந்தம் --- வைரமுத்து...!

உன் அழுகையில் பல ஏழைகளின்
கண்ணீர் துடைக்கப்படும் என்றால்,,,,
இன்னும் கூட அழ நண்பா..........!
----> நண்பேண்டா [ பாலா ]
Note : Thanks to " PUTHIYA THALAIMURAI" for their support for u...

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!