Sunday, 11 December 2011

காத்தீ சுத்தலாம் வாங்க – திருக்கார்த்திகை தீப சிறப்பு பதிவு!



காட்டுபூச்சி தன் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனது தங்கை சாந்தியும் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அது ஒரு மாலைநேரம், பள்ளியில் மணி அடித்தவுடன் வழக்கம்போல மாணவர்கள் ஹே!! என சத்தமிட்டுகொண்டு பள்ளியை விட்டு ஓடினர். காட்டுபூச்சியின் வீடு பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, குடும்பத் தொழில் விவசாயம் என்பதால் தங்களுடைய நிலத்திலே வீடுகட்டி வாழ்ந்துவந்தது அவனது குடும்பம். காட்டுபூச்சி தன் தங்கைக்காக பள்ளி வாயிலில் காத்திருந்தான். தங்கையை பள்ளிக்கு அழைத்து போவது, மீண்டும் வீட்டிற்கு அழைத்து போவது அவனது கடமைகளுள் ஒன்று. சாந்தி வந்தாள், இருவரும் வீட்டைநோக்கி நடையைகட்டினர்.

“சாந்தி இன்னைக்கி பனம்பூ பொருக்கனும்” என்றான். “எதுக்கு அண்ணா?” வினவினாள் சாந்தி. “காத்தி செய்யனும்ல” என்றான். “அதுக்கு இன்னும் பத்துநாள் இருக்கே” என்றாள். “ஞாபகம் இல்லையா?, போன தடவை நம்ம காத்தி செய்யும்போது மழை பெஞ்சி கெடுத்தது” என்றான். காத்தி செய்ய தேவையான இடுபொருட்களை சேகரிக்க தொடங்கினர். இருவரும் வழியில் இருந்த பனைமரங்களின் கீழே கிடக்கும் காய்ந்த பனம்பூக்களை, பொருக்கி புத்தக பைக்குள் போட்டுக்கொண்டனர். வீட்டிற்கு வந்தவுடன் பனம்பூக்களை சிறிய துண்டுகளாக உடைத்து உர சாக்கு ஒன்றில் பரப்பி, வீட்டின் வாசலில் இருந்த களத்தில் நன்கு வெயில் படும் இடத்தில் வைத்தான் காட்டுபூச்சி. காற்றில் பறக்காமல் இருக்க சாக்கின் நான்கு மூலைகளிலும் சிறிய கற்களை வைத்தான்.

காத்தி தயாரிப்பில் கரி முக்கிய மூலப்பொருள் ஆகையால் அம்மாவிடம் குறைந்தது மூன்று நாளைய அடுப்புக்கரியாவது வேண்டும் என கண்டிப்பாக சொல்லிவிட்டான். அம்மா சமைத்து முடித்தவுடன் அடுப்பில் உள்ள கங்கில் தண்ணீர் தெளித்து கரியாக்கவேண்டும். அம்மாவுக்கு அது ஒரு பெரிய வேலையில்லை ஆனால் அவளுக்கு தினமும் சாமான்களை விளக்க சாம்பல் தேவைப்படும். எனவே இரவு சமையலில் சாம்பலையும், காலை சமையலில் கரியையும் உற்பத்தி செய்தாள்.

இதற்கிடையில் காத்தி தயாரிப்பு முறை, என்னென்ன சேர்த்தால் பொறி அதிகமாக பறக்கும் போன்றவைதான் பள்ளி மாணவர்களிடையே முக்கிய விவாத பொருளாக இருந்தது. அதில் சிலர் தங்களை காத்தி தயாரிப்பில் கைதேர்ந்தவர்களா காட்டிகொள்வர். இன்னும் சிலர் தங்களுடைய காத்தி தயாரிப்பு சூத்திரத்தை சிதம்பர ரகசியம்போல் பாதுகாத்தனர். இப்படியாக நாட்கள் சென்றன. காத்தி தயாரிப்பு குறித்து காட்டுபூச்சி தன் சித்தப்பாவிடம் ஆலோசனை கேட்டதில், அவர் பொறிப்பூண்டு( இட்லி அளவில் குத்தாக வளரும் புல் உயரமாக வளராது) என்ற ஒரு வகை புல்லை சேர்க்க சொல்லியிருந்தார். அந்த பொறிப்பூண்டையும் சேகரித்து வீட்டில் வைத்திருந்தான். முன்னதாக நெல் உமி, வரகு உமி ஆகியவற்றையும் சேகரித்து வைத்திருந்தான். அனைத்து மூலப்பொருட்களும் கிடைத்துவிட்டன. இவை அனைத்தையும் வெய்யிலில் நன்கு உலர்த்தி வைக்குமாறு அம்மாவை கேட்டுகொண்டான்.

மேலும் சில நாட்கள் சென்றன. அன்று ஞாயிற்றுக்கிழமை இன்னும் இரண்டு நாட்களில் கார்த்திகை தீபம் எனவே காத்தி தயாரிப்பை இன்றே செய்வதென்ற முடிவுக்கு வந்தான் காட்டுபூச்சி. சாந்தியிடம் சிறிய துண்டுகளாக இருக்கும் பனம்பூவை மேலும் சிறியதாக்க சொன்னான், பொறிப்பூண்டை சிறியதாக்கும் வேலையை அவன் எடுத்துகொண்டான். இதனை முடித்தவுடன். கரி, உப்பு கொஞ்சமாக, பொறிப்பூண்டு துண்டுகள், பனம்பூ துண்டுகள் ஆகியவற்றை குந்தாணியில் (உரல் போன்று கல்லால் ஆனது, பொதுவாக உரலை மாவாட்டவும்,  குந்தணியை நெல் குத்தவும் பயன்படுத்துவர்) போட்டு உலக்கையை வைத்து இடித்தான். கலவை நன்கு இடிந்தபின் அதனுடன் நெல் உமி, வரகு உமி ஆகியவற்றை சேர்த்தான். சென்ற பொங்கலுக்கு அம்மாவுக்கு தமிழக அரசின் மூலம் கிடைத்த கைத்தறி சேலை கிழிந்துவிட்டதால், அம்மா இப்பொழுது அதனை பயன்படுத்துவதில்லை. காத்தி பொட்டலம் கட்டுவதற்கு உகந்தது இந்தமாதிரியான நூல் துணிதான். பொட்டலம் கட்ட அம்மாவிடம் அந்த சேலையை வாங்கிகொண்டான்.

பொட்டலம் கட்ட அப்பாவின் உதவியை நாடினான் காட்டுபூச்சி. அப்பாசேலையை செவ்வக துண்டுகளாகவும், கயிறு போன்றும் கிழித்து கொண்டார். இடிக்கப்பட்ட கலவையில் கொஞ்சம் எடுத்து ஒரு செவ்வக துண்டில் வைத்து சுருட்டினார். படியை(அரிசி அளக்க பயன்படுவது) விட சற்று சிறிய அளவிலான உருளையாகினார். கயிறுபோன்று கிழித்த துணியை கொண்டு உருளை அவிழாத வண்ணம் கட்டினார். இதேபோல் காட்டுபூச்சி இடித்த கலவையைக் கொண்டு ஐந்து உருளைகளை உருவாக்கினார் அப்பா. காத்தி சுத்த பயமாக இருந்தாலும் தனக்கென்று இரு பொட்டலங்களை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள் சாந்தி. மீதமிருப்பதை காட்டுபூச்சி பதிரப்படுத்தி கொண்டான்.

மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குடும்பம், கார்த்திகை ஆரம்பித்தவுடன் அகல் விளக்குகள் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள். தீபத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக வீடுவீடாக சென்று அகல்களை விற்பனை செய்ய தொடங்கிவிடுவார்கள். ஊரில் விற்பனை முடித்து, காட்டுகொட்டாய் பகுதிகளுக்கு தீபம் அன்று காலையில் தான் வருவார்கள். அப்படி தீபம் அன்று காட்டுபூச்சி வீட்டிற்கும் வந்தார் அகல் விற்பவர். காட்டுபூச்சியின் பாட்டி மூன்று படி அரிசி கொடுத்து 25 அகல்கள் வாங்கினார். அகல்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து பின்னர் எடுத்து பயன்படுத்துவது வழக்கம். ஒரு அண்டாவில் அகல்களை போட்டு தண்ணீரை ஊற்றினார் பாட்டி. அகல்கள் சலசல என்ற சத்தத்துடன் தண்ணீரை குடித்து. அண்டாவிலிருந்து காற்று குமிழ்கள் சத்தத்துடன் வெளியேறுவதை ஆச்சர்யமாக பார்த்துகொண்டிருந்தாள்.

மாலை ஐந்து மணியானதும் பாட்டி சாந்தியிடம் அண்டாவிலிருந்த அகல்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார். அகல் எடுக்கச்சென்ற சாந்திக்கு ஆச்சரியம் அண்டாவில் பாதிக்கு கீழ் தண்ணீர் குறைந்திருந்தது. அகல்கள் அவ்வளவு தாகத்தில் இருந்திருக்கின்றன. சாந்தி அகல்களை எடுத்து கிழே வரிசையாக வைத்தாள்.  அதற்குள் பாட்டி பஞ்சை திரித்து அகலுக்கான திரி செய்ய தொடங்கி இருந்தார். சாந்தி பாட்டி தயாரித்த திரியை ஒவ்வொன்றாக அகல்களுக்கு அணிவித்தாள். ஆதவன் மறைய காத்திருந்தனர்.

காட்டுபூச்சியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல், அப்பா காத்தி கட்ட தயாரானார். நொச்சி செடியிலிருந்து வெட்டிய நொச்சி குச்சிகளில் (வளையும் தன்மை கொண்டது) முதலில் மூன்றை எடுத்தார் ஒவ்வொன்றும் சுமார் அரை மீட்டர் நீளம் கொண்டது, காட்டுபூச்சி தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த உருளை பொட்டலத்தோடு நின்றிருந்தான். அந்த மூன்று குச்சிகளின் ஒருமுனையில் சனலை கொண்டு இருக கட்டினார். அப்பா பொட்டலத்தை வாங்கி, குச்சிகளுக்கு இடையில் வைத்தார். மறுமுனையையும் சனலைக்கொண்டு மூன்று குச்சிகளையும் சேர்த்துகட்டினார். இப்பொழுது ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கயிறை கட்டினார்.ஒருவழியாக  காத்தி தயாரிப்பு நிறைவடைந்தது. இதேபோல் சாந்திக்கும் ஒரு காத்தியை செய்துகொடுத்தார். காட்டுபூச்சி காத்தியின் மூன்று குச்சிகளுக்கு இடையில் உருளை பொட்டலத்தில் நெருப்பு துண்டுகளை வைத்தான், அப்பா அதனை அசைக்காமல் அப்படியே எடுத்துசென்று அருகிலிருந்த வேப்பமர கிளையில் கட்டி தொங்க விட்டார். இது கனிவதற்க்கு பத்து நிமிடங்களாவது பிடிக்கும்.இதற்கிடையில் வீட்டில், குப்பைமேட்டில், கிணற்று படியில் என எங்கும் அகல்கள் எற்றபட்டிருந்தன. அந்த முன்னிரவு நேரத்தில் ஜெகஜோதியாக இருந்தது வீடு.

காத்தி நன்கு கனிந்தவுடன் மரத்திலிருந்து அவிழ்த்து காட்டுபூச்சியிடம் கொடுத்தார் அப்பா. ஒருமுனையிலிருந்த கயிற்றை இருக பற்றிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தான். பொறி பிரமாதமாக வந்தது. காட்டுபூச்சி காத்தி சுற்றுவதை சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. கம்பிமத்தாப்பு யாருடைய உதவியுமின்றி அந்தரத்தில் வட்டமடிப்பது போல இருந்தது. கண்கொள்ளாக்காட்சி. திடீரென வானதில் வெடி சத்தம் கேட்டது. வானவெடி சத்தம் ‘இன்னும் சற்று நேரத்தில் சொக்கப்பானை கொளுத்தப்படும்’ என்ற செய்தியை தாங்கி வந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாரானார்கள். தனது காத்தியை நண்பர்களுக்கு காட்டவேண்டும் என்ற ஆவலுடன் சொக்கப்பானை கொளுத்தும் கோவிலை நோக்கி குடும்பத்தினருடன் வேக நடையிட்டான் காட்டுபூச்சி. சாந்தி தன் காத்தியை வீட்டிலே வைத்துவிட்டு சென்றாள். சொக்கப்பானை என்பது நடுவில் பச்சை வாழைமரம் நட்டு சுற்றிலும் துவரை மெளார் (மகசூல் முடிந்து வெட்டப்பட்ட காய்ந்த செடி) நட்டு அதை சற்றிலும் காய்ந்த தென்னங்கீற்று நட்டு. பின்னர் அதை கொளுத்துவர் சுற்றிலும் உள்ள மக்கள் தீச்சுவாலையில் உப்பை போடுவார்கள். சொக்கப்பானை படபட வென்று மிகுந்த வெடி சத்தத்துடன் எரியும்.


காட்டுபூச்சி தன் நண்பர்களிடத்தில் சுற்றிக்காட்டி பெருமைகொண்டான். சொக்கப்பானை எரிந்து முடிந்தவுடன் குடும்பத்துடன் வீடுதிரும்பினான் காட்டுபூச்சி. அதற்குள் உருளை பொட்டலம் காலியாகி இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் அடுத்த பொட்டலத்தை மூன்று குச்சிகளுக்கிடையில் நுழைத்தான்.

நான் காத்தி எனச்சொல்வதை, உங்கள் பகுதியில் எவ்வாறு அழைப்பார்கள்? என்று பின்னூட்டத்தில் மறக்காம சொல்லிட்டுபோங்க


காத்தி சுத்துவதை போன்ற படம் வலையில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

Saturday, 3 December 2011

நாமும் சொல்லலாமே ஆலோசனை!



காட்டுப்பூச்சி. மழை மீது பயங்கர கடுப்பில் இருந்தான். மழைபெய்தா சந்தோஷப்பட இவன் கிராமத்து விவசாயியா என்ன? மழைபெய்தால் பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து விட்டு கேழே பாதாள சாக்கடை இருக்க கூடாது என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே தாண்டித்தாண்டி செல்லும் ஒரு சென்னைவாசி. காட்டுப்பூச்சி பதையாத்திரியாக இவ்வளவு கஷ்ட்டப் பட்டாலும். தான் பேருந்தில் போகும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்காகவும், இந்த குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்ய சுங்கவரி கட்டி காரில் சொகுசுப் பயணம் செய்பவர்களுகாகவும் பரிதாபப்படுவான்.
காட்டுப்பூச்சி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை படித்தான். அதன் சுட்டி 


பி.டபிள்யூ.சி. டேவிதார் புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கபட்டார். அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சொன்னார் “மழைநீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தர தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்க்கு குடியிருப்போர்களின் உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் அந்தந்த பகுதிமக்களுக்குதான் தங்கள் பகுதியை பற்றி நன்றாக தெரியும்“ என்றார். இதற்காகவே சென்னை மாநகராட்சி ஒரு மினஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளது. stopflooding@chennaicorporation.gov.in இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம். உங்கள் ஆலோசனைகளை எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக படமாக வரைந்து அனுப்பினால், பரிசீலனை செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும். டிசம்பர் 16குள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பவேண்டும்.

காட்டுப்பூச்சி இந்தத்தகவலை படித்தவுடன் தன் பகுதிக்கான தீர்வை பகுதிமக்களுடன் கலந்தாலோசிக்க தொடங்கிவிட்டான்.
நாமும் சொல்லாமே ஆலோசனை?

Friday, 11 November 2011

மனிதம் கொன்று மாக்கள் வளர்ப்போம்!


சமீபத்தில் இப்பூவுலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டியதாக செய்திதாள்களில் படிக்க நேர்ந்தது. 700 கோடியாவது குழந்தை என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தையும், இந்தியத்திருநாட்டின் உத்திரப்பிரதேச குழந்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன என்று தோராயமா கணக்குப்போட்டு சொல்லிட்டாங்க. நான் என் தாய்க்கு இரண்டாவது குழந்தை என்று வைத்துக்கொள்வோம். என் அண்ணன் இறந்துவிட்டால் என் தாய்க்கு நான்தான் தலைசன் குழந்தை ஆகிவிடுவேனா என்ன? உலக மக்கள் தொகை பற்றி வலையில் தேடும்போது, விக்கிபீடியா எனக்கு பல சுவாரஸ்ய தகவல்களை கொடுத்தது. அதில் ஒன்று ஜப்பானின் மக்கள் தொகை குறைந்துகொண்டிருக்கிறது என்பது. நான் விக்கிபீடியாவை நம்பாமல் கூகிள் தேடுபொறியில் ஜப்பானின் மக்கள் தொகை பெருக்க விகிதம் என்ன? என்று தேடினேன். கிடைத்த பதில் கீழ்காணும் படம்தான். ஆம் விக்கிபீடியா சொன்னது உண்மை தான். இதுபோல உலகின் மக்கட்தொகை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.


பூமித்தாயிடம் எனது கேள்வி, எம்குலத்தாய்க்கு தன் கடைசி காலங்களில் பெண்பிள்ளைதான் கஞ்சி ஊற்றும் என தெரிந்திருந்தும், தனக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என ஆசைப்படுவதை போலவே நீயும் இந்த மனிதக்குழந்தைகள்தான் உம்மை உருகுலைப்பது என்று அறிந்திருந்தும் அவர்கள்மீது கொள்ளை ஆசை கொண்டிருப்பதெப்படி?
என் நண்பன் ஒருவன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில் சமீபத்தில் பயணம் செய்ய நேர்ந்தது. நண்பனிடம் உறுதியாக்கப்பட்ட பயணசீட்டு இல்லை, மாறாக வெயிட்டிங் லிஸ்ட் சீட்டு இருந்தது அதைவைத்து பயணசீட்டு பரிசோதகரிடம் பேசி இருக்கையை உறுதிசெய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்லீப்பர் பெட்டியில் ஏறிவிட்டான். பரிசோதகர் அவன் இருந்த பெட்டிக்குள் நுழைந்தவுடன். அவரிடம் சென்று பேசிவிட்டான், பரிசோதனை முடிந்தவுடன் நாம் மீண்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டு தன் பணியை செவ்வனே தொடங்கினார். பிச்சைகாரர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், பயணச்சீட்டை கேட்டிருக்கிறார், இல்லை என்று தெரிந்தவுடன் காலால் எட்டி உதைத்திருகிறார். ஒரு மீட்டர் தொலைவாவது சென்று மற்றொரு இருக்கையில் இடிதுக்கொண்டார் உதை பட்டவர். இதைப் பார்த்தவுடன் நண்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னொரு இனிய சம்பவம் நடப்பதற்கு காத்துகொண்டிருப்பது நண்பனுக்கு தெரிந்திருப்பது நியாயம் இல்லை. சற்று பயத்துடன் நின்றுகொண்டிருகிறான் இருக்கைகள் காலியாக இருந்தும் அமரவில்லை. இன்னொருவர் பரிசோதகரிடம் மாட்டிகொண்டார். இம்முறை பரிசோதகரின் கை பயணியின் கன்னத்தில் இறங்கியது வசவுசொற்க்களுடன் கூடிய அர்ச்சனையும் இலவச இணைப்பாக கிடைத்தது. இதைப்பார்த்த நண்பன் கலவரம் ஆகிவிட்டான்.

பதற்றத்தை மறைத்துக்கொண்டு நின்றபடியே பயணத்தை தொடர்ந்தான். மேற்படி சம்பவங்களில், பரிசோதகர் பல சண்டிப் பயணிகளை பார்த்திருப்பதால் சக மனிதர்களிடையே காட்டும் குறைந்தபட்ச அன்பு, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை இழந்திருக்ககூடும். சம்பவத்தில் பதிக்கப்பட்ட நபர்கள் “இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ், திட்டிக்கிட்டும் அடிச்சிகிட்டும் இருப்பாங்க.. வாங்க பாஸ் நம்ம வேலையை நம்ம கண்டினியு பண்ணுவோம்” (ஒரு சினிமா வசனம்)  என்பதை போல குறைந்தபட்ச மான, ரோசங்களை இழந்து நிற்கின்றனர். இது போன்ற மாற்றங்களுக்கு முழுமுதற் காரணம் மக்கள் தொகை பெருக்கம். ஒருவழியாக பரிசோதகர் தன் பணியை முடித்துவிட்டு இருக்கையில் அமரும்போது நண்பன் மீண்டும் தனது பேச்சுவார்த்தையை துவக்கினான். “ஸ்லீப்பர் கிளாஸ்ல ஒரு டிக்கட் கூட இல்லை” என்றார். முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகச் சொல்லி விலை 900 ரூபாய் என்றார். வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னான். பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கை எண்ணை சொல்லி அதில் படுத்துக்கொள்ள சொன்னார். ரசீது எதுவும் கொடுக்காததால், இவர் இடையில் எதாவது ஸ்டேஷனில் இறங்கி கொண்டு வேறொருவர் வந்தால் என்னசெய்வது என்று நண்பனுக்கு ஒரு பயம். அதனால் பணம் கொடுத்தவரிடம் சென்று நீங்கள் சென்னை வரை வருவீர்களா? வேறொரு டி.டி வந்தால் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டான். நீங்க இன்னும் தூங்கலையா தம்பி, போய் கவலைபடாம தூங்குங்க நான் சென்னை வரைக்கும் வருவேன் என்றார். இப்படியாக அவன் சென்னை வந்து சேர்ந்தான்.

கீழேயுள்ள காணொளிகளை பாருங்கள். ஒன்று நம்ம கோவை மாநகரில் நடந்தது மற்றொன்று சீனாவில் நடந்தது.







மக்கள் தொகை அதிகமாகும்போது சக மனிதர்களின் உயிர் துச்சமென மதிக்கப்படுகிறது. “நாலுபேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் தப்பில்ல” என்ற வசனம் போய் “நமக்கு நல்லதுன்னா நாலுபேரை போட்டுத்தள்னாலும் தப்பில்ல” என்ற வசனம் வந்துவிட்டது. யதார்த்தம் என்ற மாயையில் சுயநலம் பெருமைப்படக்கூடிய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு பல காரணங்கள், மருத்துவ முன்னேற்றம், சராசரி மனித ஆயுட்காலம் உயர்வு என அடுக்கலாம். மூன்று தலைமுறை வாழ்ந்த இடங்களில். இன்று நான்கு தலைமுறை வாழ்கிறது.


சரி பெருக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தலாமா? அப்படிச்செய்தால் தனிமனித உரிமை குழுக்கள் போராட்டம் நடத்துமோ? சமூக விழிப்புணர்வு போன்றவற்றால் தடுக்கமுடியுமா? நீங்கள்தான் பின்னூட்டத்தில் வந்து சொல்லணும்.

இன்றைய தேதியில் கருத்தரிப்பு மையம் நல்ல பிசினஸ். திருமணமான தம்பதிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக குழந்தை இல்லையென்றால் அவ்வளவுதான். தம்பதிகளுக்கே அதை பற்றிய கவலை இல்லையென்றாலும். சுற்றுபுறம் ஆளாளுக்கு ஒரு வைத்தியரை பார்க்கசொல்வார்கள். அதுவும் பெற்றோர்களில் புலம்பல்கள் தாங்கமுடியமலே கருத்தரிப்பு மையத்துக்கு சென்று பணத்தை கொட்டி தம்பதிகள் தங்களுடைய வாரிசுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தை பிறந்தால் தான் ஆண்மை, பெண்மை முழுமைபெற்றதாக அர்த்தம். அப்பொழுதுதான் சமூத்தில் மரியாதையை கிடைக்கும். நாமெல்லாம் போதிதர்மர்களா என்ன, சந்ததிகளுக்கு நம்முடைய டி.என்.ஏ அவ்வளவு முக்கியமா? குழந்தை இல்லையென்றால், ஏன் ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவரை தத்தெடுத்துகொள்ளக்கூடாது? எப்படியாவது பெருக்க விகிதத்தை கட்டுப்படுதியாகவேண்டும் இல்லையேல், மனிதம் அற்ற தனிமனிதர்கள் தங்களுக்குள்ளாகவே யுத்தமிட்டு இறக்க நேரிடும். ஒருவேளை அதை நோக்கித்தான் நாம் பயணம் செய்கிறோமா?