Saturday, 3 December 2011

நாமும் சொல்லலாமே ஆலோசனை!



காட்டுப்பூச்சி. மழை மீது பயங்கர கடுப்பில் இருந்தான். மழைபெய்தா சந்தோஷப்பட இவன் கிராமத்து விவசாயியா என்ன? மழைபெய்தால் பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து விட்டு கேழே பாதாள சாக்கடை இருக்க கூடாது என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே தாண்டித்தாண்டி செல்லும் ஒரு சென்னைவாசி. காட்டுப்பூச்சி பதையாத்திரியாக இவ்வளவு கஷ்ட்டப் பட்டாலும். தான் பேருந்தில் போகும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்காகவும், இந்த குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்ய சுங்கவரி கட்டி காரில் சொகுசுப் பயணம் செய்பவர்களுகாகவும் பரிதாபப்படுவான்.
காட்டுப்பூச்சி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை படித்தான். அதன் சுட்டி 


பி.டபிள்யூ.சி. டேவிதார் புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கபட்டார். அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சொன்னார் “மழைநீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தர தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்க்கு குடியிருப்போர்களின் உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் அந்தந்த பகுதிமக்களுக்குதான் தங்கள் பகுதியை பற்றி நன்றாக தெரியும்“ என்றார். இதற்காகவே சென்னை மாநகராட்சி ஒரு மினஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளது. stopflooding@chennaicorporation.gov.in இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம். உங்கள் ஆலோசனைகளை எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக படமாக வரைந்து அனுப்பினால், பரிசீலனை செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும். டிசம்பர் 16குள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பவேண்டும்.

காட்டுப்பூச்சி இந்தத்தகவலை படித்தவுடன் தன் பகுதிக்கான தீர்வை பகுதிமக்களுடன் கலந்தாலோசிக்க தொடங்கிவிட்டான்.
நாமும் சொல்லாமே ஆலோசனை?

Friday, 11 November 2011

மனிதம் கொன்று மாக்கள் வளர்ப்போம்!


சமீபத்தில் இப்பூவுலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டியதாக செய்திதாள்களில் படிக்க நேர்ந்தது. 700 கோடியாவது குழந்தை என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தையும், இந்தியத்திருநாட்டின் உத்திரப்பிரதேச குழந்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன என்று தோராயமா கணக்குப்போட்டு சொல்லிட்டாங்க. நான் என் தாய்க்கு இரண்டாவது குழந்தை என்று வைத்துக்கொள்வோம். என் அண்ணன் இறந்துவிட்டால் என் தாய்க்கு நான்தான் தலைசன் குழந்தை ஆகிவிடுவேனா என்ன? உலக மக்கள் தொகை பற்றி வலையில் தேடும்போது, விக்கிபீடியா எனக்கு பல சுவாரஸ்ய தகவல்களை கொடுத்தது. அதில் ஒன்று ஜப்பானின் மக்கள் தொகை குறைந்துகொண்டிருக்கிறது என்பது. நான் விக்கிபீடியாவை நம்பாமல் கூகிள் தேடுபொறியில் ஜப்பானின் மக்கள் தொகை பெருக்க விகிதம் என்ன? என்று தேடினேன். கிடைத்த பதில் கீழ்காணும் படம்தான். ஆம் விக்கிபீடியா சொன்னது உண்மை தான். இதுபோல உலகின் மக்கட்தொகை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.


பூமித்தாயிடம் எனது கேள்வி, எம்குலத்தாய்க்கு தன் கடைசி காலங்களில் பெண்பிள்ளைதான் கஞ்சி ஊற்றும் என தெரிந்திருந்தும், தனக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என ஆசைப்படுவதை போலவே நீயும் இந்த மனிதக்குழந்தைகள்தான் உம்மை உருகுலைப்பது என்று அறிந்திருந்தும் அவர்கள்மீது கொள்ளை ஆசை கொண்டிருப்பதெப்படி?
என் நண்பன் ஒருவன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில் சமீபத்தில் பயணம் செய்ய நேர்ந்தது. நண்பனிடம் உறுதியாக்கப்பட்ட பயணசீட்டு இல்லை, மாறாக வெயிட்டிங் லிஸ்ட் சீட்டு இருந்தது அதைவைத்து பயணசீட்டு பரிசோதகரிடம் பேசி இருக்கையை உறுதிசெய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்லீப்பர் பெட்டியில் ஏறிவிட்டான். பரிசோதகர் அவன் இருந்த பெட்டிக்குள் நுழைந்தவுடன். அவரிடம் சென்று பேசிவிட்டான், பரிசோதனை முடிந்தவுடன் நாம் மீண்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டு தன் பணியை செவ்வனே தொடங்கினார். பிச்சைகாரர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், பயணச்சீட்டை கேட்டிருக்கிறார், இல்லை என்று தெரிந்தவுடன் காலால் எட்டி உதைத்திருகிறார். ஒரு மீட்டர் தொலைவாவது சென்று மற்றொரு இருக்கையில் இடிதுக்கொண்டார் உதை பட்டவர். இதைப் பார்த்தவுடன் நண்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னொரு இனிய சம்பவம் நடப்பதற்கு காத்துகொண்டிருப்பது நண்பனுக்கு தெரிந்திருப்பது நியாயம் இல்லை. சற்று பயத்துடன் நின்றுகொண்டிருகிறான் இருக்கைகள் காலியாக இருந்தும் அமரவில்லை. இன்னொருவர் பரிசோதகரிடம் மாட்டிகொண்டார். இம்முறை பரிசோதகரின் கை பயணியின் கன்னத்தில் இறங்கியது வசவுசொற்க்களுடன் கூடிய அர்ச்சனையும் இலவச இணைப்பாக கிடைத்தது. இதைப்பார்த்த நண்பன் கலவரம் ஆகிவிட்டான்.

பதற்றத்தை மறைத்துக்கொண்டு நின்றபடியே பயணத்தை தொடர்ந்தான். மேற்படி சம்பவங்களில், பரிசோதகர் பல சண்டிப் பயணிகளை பார்த்திருப்பதால் சக மனிதர்களிடையே காட்டும் குறைந்தபட்ச அன்பு, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை இழந்திருக்ககூடும். சம்பவத்தில் பதிக்கப்பட்ட நபர்கள் “இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ், திட்டிக்கிட்டும் அடிச்சிகிட்டும் இருப்பாங்க.. வாங்க பாஸ் நம்ம வேலையை நம்ம கண்டினியு பண்ணுவோம்” (ஒரு சினிமா வசனம்)  என்பதை போல குறைந்தபட்ச மான, ரோசங்களை இழந்து நிற்கின்றனர். இது போன்ற மாற்றங்களுக்கு முழுமுதற் காரணம் மக்கள் தொகை பெருக்கம். ஒருவழியாக பரிசோதகர் தன் பணியை முடித்துவிட்டு இருக்கையில் அமரும்போது நண்பன் மீண்டும் தனது பேச்சுவார்த்தையை துவக்கினான். “ஸ்லீப்பர் கிளாஸ்ல ஒரு டிக்கட் கூட இல்லை” என்றார். முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகச் சொல்லி விலை 900 ரூபாய் என்றார். வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னான். பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கை எண்ணை சொல்லி அதில் படுத்துக்கொள்ள சொன்னார். ரசீது எதுவும் கொடுக்காததால், இவர் இடையில் எதாவது ஸ்டேஷனில் இறங்கி கொண்டு வேறொருவர் வந்தால் என்னசெய்வது என்று நண்பனுக்கு ஒரு பயம். அதனால் பணம் கொடுத்தவரிடம் சென்று நீங்கள் சென்னை வரை வருவீர்களா? வேறொரு டி.டி வந்தால் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டான். நீங்க இன்னும் தூங்கலையா தம்பி, போய் கவலைபடாம தூங்குங்க நான் சென்னை வரைக்கும் வருவேன் என்றார். இப்படியாக அவன் சென்னை வந்து சேர்ந்தான்.

கீழேயுள்ள காணொளிகளை பாருங்கள். ஒன்று நம்ம கோவை மாநகரில் நடந்தது மற்றொன்று சீனாவில் நடந்தது.







மக்கள் தொகை அதிகமாகும்போது சக மனிதர்களின் உயிர் துச்சமென மதிக்கப்படுகிறது. “நாலுபேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் தப்பில்ல” என்ற வசனம் போய் “நமக்கு நல்லதுன்னா நாலுபேரை போட்டுத்தள்னாலும் தப்பில்ல” என்ற வசனம் வந்துவிட்டது. யதார்த்தம் என்ற மாயையில் சுயநலம் பெருமைப்படக்கூடிய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு பல காரணங்கள், மருத்துவ முன்னேற்றம், சராசரி மனித ஆயுட்காலம் உயர்வு என அடுக்கலாம். மூன்று தலைமுறை வாழ்ந்த இடங்களில். இன்று நான்கு தலைமுறை வாழ்கிறது.


சரி பெருக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தலாமா? அப்படிச்செய்தால் தனிமனித உரிமை குழுக்கள் போராட்டம் நடத்துமோ? சமூக விழிப்புணர்வு போன்றவற்றால் தடுக்கமுடியுமா? நீங்கள்தான் பின்னூட்டத்தில் வந்து சொல்லணும்.

இன்றைய தேதியில் கருத்தரிப்பு மையம் நல்ல பிசினஸ். திருமணமான தம்பதிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக குழந்தை இல்லையென்றால் அவ்வளவுதான். தம்பதிகளுக்கே அதை பற்றிய கவலை இல்லையென்றாலும். சுற்றுபுறம் ஆளாளுக்கு ஒரு வைத்தியரை பார்க்கசொல்வார்கள். அதுவும் பெற்றோர்களில் புலம்பல்கள் தாங்கமுடியமலே கருத்தரிப்பு மையத்துக்கு சென்று பணத்தை கொட்டி தம்பதிகள் தங்களுடைய வாரிசுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தை பிறந்தால் தான் ஆண்மை, பெண்மை முழுமைபெற்றதாக அர்த்தம். அப்பொழுதுதான் சமூத்தில் மரியாதையை கிடைக்கும். நாமெல்லாம் போதிதர்மர்களா என்ன, சந்ததிகளுக்கு நம்முடைய டி.என்.ஏ அவ்வளவு முக்கியமா? குழந்தை இல்லையென்றால், ஏன் ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவரை தத்தெடுத்துகொள்ளக்கூடாது? எப்படியாவது பெருக்க விகிதத்தை கட்டுப்படுதியாகவேண்டும் இல்லையேல், மனிதம் அற்ற தனிமனிதர்கள் தங்களுக்குள்ளாகவே யுத்தமிட்டு இறக்க நேரிடும். ஒருவேளை அதை நோக்கித்தான் நாம் பயணம் செய்கிறோமா?

Monday, 24 October 2011

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது?


தமிழகத்தில் இயங்கும் கட்சிகளை பற்றி நினைக்கும்போது எல்லோரையும் போலவே எனக்கும் விளங்காத (விடைதெரியாத) அதே கேள்விதான். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது? காங்கிரஸா, தேமுதிக வா, மதிமுக வா, பாமக வா? இல்லை இவற்றில் இல்லாத ஏதோ ஒரு கட்சியா? இதற்கான விடை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிச்சயம் மாறுபடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்க்கு உதாரணம். சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிக சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது (தமிழக பத்திரிகைகள் இப்படிதான் கூறின). இதற்க்கு கரணம் என்ன? விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதா? இல்லை இந்த கட்சிக்கு செல்வாக்கே இவ்வளவுதானா? இது நம் பிரச்சனையில்லை, எனவே தோல்விக்கான காரணத்தை அந்த கட்சி தன் சொந்த செலவில் கண்டுபிடித்து கொள்ளட்டும். திமுக சார்பு பத்திரிகைகள் தனது கட்சியின் தோல்வி குறித்து வருத்தபடாமல், தேமுதிக, காங்கரஸ், பாமக கட்சிகளின் தோல்வியில் இன்பம் அடைகின்றன.
ஒரு தனிப்பட்ட கட்சியின் வாக்கு வங்கி மிகவும் ரகசியமான ஒன்றாகவே இவ்வளவு நாட்களாக இருந்துவந்தது. இதற்கான காரணம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். இந்த ரகசியத்தை ஓரளவு கசியவைத்த பெருமை உள்ளாட்சி தேர்தல் 2011 -ஐச்சேரும். இதேபோல் சட்டமன்ற / பாராளுமன்ற பொதுத்தேர்தல் களையும் இந்த கட்சிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும். இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது என்ற விவரங்களை அறிந்துகொள்ள இணையத்தில் உலவும் போது  கீழேயுள்ள புள்ளி விவரங்களை தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காண முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த பல தகவல்களை ஆணையம் அழகாக நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட காண முடிந்தது. ஆனால் உள்ளாட்சியிலேயே கடை மட்ட பதவியான கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அளவில் தகவல்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்குள் ஆணையம் அந்த வசதியையும் கொண்டுவந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் சுட்டி
நன்றி : தமிழக தேர்தல் ஆணையம்
இந்த புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறிவது,

1.       49.15%  இடங்களில் அஇஅதிமுக வெற்றிபெற்றுள்ளது. (வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது சென்னை மாநகராட்சி மேயரும், சின்னசேலம் பேரூராட்சியின் வார்டு உறுப்பினரும் சமப்படுத்தப்பட்டுள்ளனர்).

2.       20.20% இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

3.       16.52% இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

4.        4.26%  இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.

5.       3.69% இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

6.       மீதமுள்ள 6.57%  இடங்களில் மற்ற 25+ கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது.

7.       தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இயங்கிகொண்டிருகின்றன.

8.       இதில் மற்றவை(others) என்று விசிக வுக்கு மேலே உள்ளதை கவனிக்கவும். தேர்தல் ஆணையமே குழம்பிப்போய் இந்த கட்சிகளின் பெயரை வெளியிட முடியாமல் மற்றவை என்ற ஒரே வகையில் வெளியிட்டுள்ளது.

9.       இருபதாயிரத்து சொச்ச இடங்களில் ஒன்றைக்கூட வெல்லமுடியாமல் 12 கட்சிகள் உள்ளன. இவையெல்லாம் வட நாட்டு கட்சிகளா? வடநாட்டு கட்சிகளாக இருந்தால் எதற்கு தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும்? ஒன்றும் புரியவில்லை.

10.    தலைப்பில் உள்ள கேள்விக்கு வருவோம். மூன்றாவது பெரிய கட்சி, அப்படியொன்றே இல்லை என்றுதான் இந்த புள்ளி விவரம் சொல்கிறது.

11.    அஇஅதிமுக மற்றும் திமுக தவிர மற்ற அணைத்து கட்சிகள் வென்ற மொத்த இடங்கள் 2840 ஆனால் சுயேட்சைகள் வென்ற இடங்கள் 3326.

12.    ஆக மூன்றாவது சக்தி அல்லது மாற்று சக்தி எனப்படுவது சுயேட்சைகள். எனவே மாற்றம் விரும்பும் பதிவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக களம் இறங்குங்கள். குடிமகனின் ஆதரவு என்றும் உங்களுக்கே.

மனதில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்!! அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!